அறைக்குள் தள்ளி அசிங்கப்படுத்தினார்: ஷமி மீது அதிர வைக்கும் புகார்
ஷமி அவரது சகோதரரின் அறைக்குள் தள்ளி தன்னை அசிங்கப்படுத்தினார் என ஹசின் ஜஹான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவரின் மனைவி ஹசின் ஜஹான். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் சமீபகாலமாக திடீரென அனல் பறக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே முகமது ஷமி மீது அவரது மனைவி அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார். ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு போட்டிகளுக்காக செல்லும்போது பல பெண்களுடன் ஷமி உறவில் இருப்பதாகவும் கூறியிருந்தார். அத்தோடு மட்டுமில்லாமல் ஷமி குடும்பத்தினர் தன்னை அதிகமாக கொடுமைப்படுத்துவதாகவும், ஷமி தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் மனைவியின் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ச்சியாகவே ஷமி மறுப்பு தெரிவித்து வந்தார். இதனிடையே, கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் போலீஸ் நிலையத்தில் ஹசின் ஜஹான் அளித்த புகாரின் அடிப்படையில், முகமது ஷமி மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஷமி மீது ஹசின் ஜஹான் மேலும் ஒரு அதிரவைக்கும் புகாரை தெரிவித்துள்ளார். ஷமி அவரது சகோதரருடன் தன்னை உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாக ஹிசின் ஜஹான் அதிர்ச்சிக்குள்ளாக்கும் புகாரை தெரிவித்துள்ளார். “ஷமி அவரது சகோதரர் ஹசீப் இருக்கும் அறைக்குள் என்னை வேண்டுமென்று தள்ளினார். அங்கு ஹசீப் மட்டும்தான் இருந்தார். அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். உடனே அலறியடித்து கதறினேன். இதனையடுத்து ஷமி அந்த அறையின் கதவை திறந்தார்” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே பல புகாருக்கு மறுப்பு தெரிவித்து வரும் ஷமி இந்தப் புகாருக்கு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.