ஒரு வழியா சொல்லிட்டாங்கப்பா..! பும்ராவிற்கு மாற்று வீரராக ஷமி தேர்வு!

ஒரு வழியா சொல்லிட்டாங்கப்பா..! பும்ராவிற்கு மாற்று வீரராக ஷமி தேர்வு!
ஒரு வழியா சொல்லிட்டாங்கப்பா..! பும்ராவிற்கு மாற்று வீரராக ஷமி தேர்வு!

டி20 உலககோப்பை அணியில் இருந்து பும்ரா விலகிய நிலையில் பும்ராவிற்கு மாற்று வீரர் யார் என்பது அறிவிக்கப்படாமலே இருந்து வந்தது. இந்நிலையில் பும்ராவின் மாற்று வீரராக முகமது ஷமியை தேர்வு செய்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் 2022ஆம் ஆண்டின் ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக யார் இடம் பெறுவார்கள் என்ற சஸ்பென்ஸை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது இந்திய அணி தேர்வு நிர்வாகம். அனுபவமிக்க முகமது ஷமி பிரிஸ்பேனில் உள்ள இந்திய அணியில் 15ஆவது வீரராக சேருவார் என்று பிசிசிஐ உறுதிப்படுத்தி உள்ளது.

ஆசிய கோப்பையிலிருந்து ஓய்வில் வைக்கப்பட்டிருந்த இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் நீண்ட ஓய்விற்கு பிறகு பங்கேற்று விளையாடினார். இரண்டு போட்டியில் பங்கேற்று விளையாடிய பும்ரா முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அந்த தொடரில் இருந்து முழுமையாக விலகினார். பின்னர் பிசிசிஐயின் மருத்துவ கண்காணிப்பில் இருந்த பும்ரா உலககோப்பைக்கு முன்னதாக தேர்ச்சிபெற்று அணிக்கு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், காயத்திலிருந்து மீண்டு வராத பும்ரா டி20 உலககோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ.

பின்னர், பும்ராவிற்கு பதிலாக யார் உலககோப்பை அணியில் இடம் பிடிப்பார்கள் என்று எந்த அறிவிப்பையும் வெளியிடாத பிசிசிஐ, பும்ரா இடத்திற்கு முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் என்று பல இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து டி20 போட்டிகளில் சோதனை முயற்சி மேற்கொண்டது. ஆனாலும் தொடர்ந்து பும்ராவிற்கான மாற்றுவீரர் யார் என்பதில் மவுனம் சாதித்து வந்தது பிசிசிஐ.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளுக்கு முன்னர் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு டி20 தொடர்களிலிருந்து விலகிய ஷமி, அதன் பின்னர் எந்த போட்டிகளிலும் சேர்க்கப்படாமலேயே இருந்தார். பும்ரா இல்லாத நிலையில் அணியில் நிச்சயம் அனுபவ வீரரான முகமது ஷமி சேர்க்கப்பட வேண்டும் என்ற குரல் வலுத்துகொண்டே இருந்தது. இருப்பினும் உலககோப்பைக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு செல்லும் போதும் பும்ராவிற்கான மாற்றுவீரர் யார் என்ற அறிவிப்பு இல்லாமலேயே இந்திய அணி புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷா, ”இந்தியாவின் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக முகமது ஷமியை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது. ஷமி ஆஸ்திரேலியா சென்றடைந்தார், மேலும் பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக பிரிஸ்பேனில் உள்ள இந்திய அணியுடன் இணைவார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூடுதலாக, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் பேக்-அப் வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர், விரைவில் இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்லவுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com