இது நியாயமா ரசிகர்களே.. வீரர்களின் நல்ல பண்புகளை நாமே மட்டுப்படுத்தலாமா..?
இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த சில ரசிகர்களிடையே இது ஒரு தீராத வியாதியாகவே இருந்து வருகிறது. ஒரு நாட்டு வீரர், மற்றொரு நாட்டை புகழ்ந்து பேசி விட்டால் உடனே பொங்கி எழுந்துவிடுகிறார்கள். இது மிகவும் ஆரோக்கியமற்ற விஷயம்.
இந்தியா அணியின் சச்சின், தோனி, கோலி போன்ற வீரர்களுக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல், வாசிம் அக்தர், இன்சமாம் உல் ஹாக், சையித் அப்ரிதி உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கும் இந்தியாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளை கடந்து ரசிகர்கள் தங்களது அன்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்கள் நன்றாக விளையாடும் போதும் பாராட்டுவதும், இந்திய வீரர்கள் விளையாடும் போது பாகிஸ்தான் வீரர்கள் பாராட்டுவதும் நல்ல பழக்கம்தான். ஆனால், இப்படியான பாராட்டும் குணத்திற்காக முகமது கைஃப், சோயிப் அக்தரை இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ட்ரோல் செய்து இருக்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை(ஜூலை8) அன்று இரண்டு டி20 தொடர்களின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றது. அதேபோல், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.
இந்தத் தொடர்களில் பாகிஸ்தானில் சிறப்பாக விளையாடிய பஃக்கார் ஜமாமை இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃபும், இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மாவை சோயிப் அக்தரும் பாராட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டனர். இதற்காக, கைஃபை இந்திய ரசிர்களும், அக்தரை பாகிஸ்தான் ரசிகரும் ட்ரோல் செய்து இருக்கிறார்கள்.
பெரும்பாலானவர்கள் கைஃபின் ட்விட்டர் பதிவிற்கு பாராட்டு தெரிவித்து இருந்தாலும், சிலர் தேசத் துரோகி என்றும் பாகிஸ்தானுக்கே செல்லுங்கள் என்று கூறி பதிவிட்டிருந்தார்கள். ரோகித் சர்மாவையும், இந்திய அணியையும் அக்தர் பாராட்டி இருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நன்றாக விளையாடிய பஃக்கார் ஜமாமை ஏன் பாராட்டவில்லை என்று கூறி ட்ரோல் செய்து இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் வீரர் இந்திய அணியையும், இந்திய வீரர் பாகிஸ்தான் அணியையும் பாராட்டுவது ஆரோக்கியமான விஷயம் தானே. எல்லையில் இருநாடுகளுக்கு இடையில் நடக்கும் பிரச்னைகளை கடந்து இதுபோன்ற சில விஷயங்கள் ஒற்றுமையுணர்வுக்கு வழிவகுக்கும். அதனை ஏன் நாம் தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்ப வேண்டும். நாளை வேறு யாரேனும் இதுபோன்று கருத்து பதிவிட யோசித்து விடக் கூடாது. இருநாட்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் தயங்காமல் பாராட்டிக் கொள்ள வேண்டும்.
இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் டி20 கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார்கள். பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்திய அணி இரண்டாம் இடத்திலும் உள்ளது.