இரண்டாவது சோதனையில் பாக். வீரர் முகமது ஹபீஸ்க்கு கொரோனா இல்லை..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் முகமது ஹபீஸ்க்கு இரண்டாவது முறை கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதிச் செய்யப்படவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இம்மாதம் 28-ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் அவர்களது உடல்தகுதி குறித்த அறிக்கை அளிப்பதற்காக, 35 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஆரோக்கியத்துடன் இருந்த 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
ஹாரிஸ் ராஃப், ஹைதர் அலி, சதாப் கான் ஆகிய மூன்று பேருக்கும் ஏற்கெனவே கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், நட்சத்திர வீரர் முகமது ஹஃபீஸ், வஹாப் ரியாஸ், ஃபக்கர் ஸமான் உள்ளிட்ட மேலும் 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீரர்கள் யாருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
நெகட்டிவ் என வந்த வீரர்கள் அனைவருக்கும் 25 ஆம் தேதி மீண்டும் பரிசோதனை செய்துவிட்டு திட்டமிட்டபடி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், கொரோனா உறுதியான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கவனிக்கப்படுவார்கள். சில நாட்களுக்கு பின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பரிசோதனைகள் செய்யப்படும். முழுவதும் குணமடைந்து இரு பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கிய வீரரான முகமது ஹபீஸ்க்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில், அவர் தாமாக முன் வந்து குடும்பத்துடன் கொரோனா பரிசோதனையை மீண்டும் மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்படவில்லை என கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய பரிசோதனையில் கொரோனா உறுதி என வந்தது. இதனையடுத்து என்னுடைய மனதிருப்திக்காக குடும்பத்துடன் மீண்டும் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டேன். அதில் நான் உள்பட என் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்படவில்லை. கடவுளுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.