அவர் சொன்னாலும் நான் சொல்லமாட்டேன்: ரோகித்துக்கு முகமது ஆமிர் குட்டு!
என்னை சாதாரண பந்துவீச்சாளர்தான் என்று ரோகித் சர்மா சொன்னாலும் அவரை சாதாரண பேட்ஸ்மேன் என்று நான் சொல்லமாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆமிர் கூறியுள்ளார்.
சூதாட்டப் புகார் தண்டனைக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்கு திரும்பியிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டார். ரோகித் சர்மா, தவான், விராத் கோலி ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில், ‘முகமது ஆமிரை, வாசிம் அக்ரத்துடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். அவர், அந்தளவுக்கு சிறந்த பந்துவீச்சாளர் இல்லை. அவர் சாதாரண பந்துவீச்சாளர்தான். அவர் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டும். ஆனால் அவரை மிகைப்படுத்திப் பேசுகிறார்கள்’ என்று ரோகித் சர்மா கூறியிருந்தார்.
இதற்கு பதில் ஏதும் கூறாமல் இருந்த முகமது ஆமீர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘மற்றவர்கள் கருத்து பற்றி எனக்கு கவலையில்லை. நான் எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். நான் சாதாரண பந்துவீச்சாளர் என்பது அவரது (ரோகித்) கருத்து. இப்போது அந்த எண்ணத்தை அவர் மாற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் என்னை சாதாரண பந்துவீச்சாளர் என்று சொன்னாலும் அவரை சாதாரண பேட்ஸ்மேன் என்று நான் சொல்லமாட்டேன். ஏனென்றால் இந்திய அணியில் அவரது சாதனை அளப்பரியது. அதற்காக நான் அவரை மதிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.