வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, பிரிஸ்டலில் நேற்று நடந்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 369 ரன்கள் குவித்தது. 7-வது வரிசையில் இறங்கிய மொயீன் அலி, 53 பந்துகளில் சதம் அடித்தார். இங்கிலாந்து வீரர் ஒருவரின் இரண்டாவது அதிவேக செஞ்சுரி இது. அவர் 102 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 8 சிக்சர்களும் அடங்கும். (ஏற்கனவே இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் பாகிஸ்தானுக்கு எதிராக 46 பந்துகளில் சதமடித்துள்ளார்).
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ், 39.1 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இங்கிலாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் 94 ரன்களில் ரன்-அவுட் ஆனார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற மொயின் அலி கூறும்போது, ‘இந்த மைதானம் அவ்வளவு பெரியது அல்ல. அதனால் உற்சாகத்துடன் விளையாடினேன்’ என்றார்.