"மிகச் சிறந்த தருணங்களை தந்தவர்" - மாரடோனா மறைவுக்கு மோடி இரங்கல்
கால்பந்தாட்ட ஆடுகளத்தில் மிகச் சிறந்த தருணங்களை தந்தவர் மாரடோனா என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆா்ஜெண்டீனாவைச் சோ்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா (60) மாரடைப்பால் நேற்று காலமானார்.1960 இல் அக்டோபார் 30-ஆம் தேதி பியூனஸ் அயா்ஸில் பிறந்தார். கால்பந்து உலகின் நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்த அவர் கடந்த 1986-ஆம் ஆண்டில் ஆா்ஜெண்டீனா அணி உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்தார்.
மாரடோனா 1977 முதல் 1979 வரையில் ஆா்ஜெண்டீனாவின் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான அணிக்காக 15 ஆட்டங்களில் 8 கோல்களும், தேசிய அணிக்காக 1977 முதல் 1994 வரையில் 91 ஆட்டங்களில் 34 கோல்களும் அடித்துள்ளார். 1990 உலகக் கோப்பை போட்டியில் அவா் பங்களிப்புடன் இறுதிச்சுற்றுவரை முன்னேறியது ஆா்ஜெண்டீனா. கால்பந்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு பல கிளப் அணிகளுக்கு பயிற்சியாளரான மாரடோனா, கடைசியாக ஜிம்னாசியா டி லா பிளாடா அணிக்கு பயிற்சியாளராக இருந்தார்.
இந்நிலையில் மாரடோனாவின் மறைக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் அதில் " கால்பந்து ஆட்டத்தின் மாஸ்ட்ரோவாகத் திகழ்ந்த மாரடோனா உலகளவில் புகழ் பெற்றிருந்தார். ஆடுகளத்தில் மிகச்சிறந்த தருணங்களை நமக்குத் தந்தார். அவருடைய மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரடோனாவின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்றார்.