மித்தாலி ராஜ் தலைமையில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மித்தாலி ராஜ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை 2-1, டி20 தொடரை 3-1, கணக்கில் வென்று அசத்தியது. இதனையடுத்து, இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா அணி உடன் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஐசிசி உலகக் கோப்பையின் பகுதியாக நடத்தப்படும் இந்தப் போட்டிகள், வதோதராவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் மார்ச் 12 இல் தொடங்கி, 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை, அகில இந்திய மகளிர் தேர்வு குழு இன்று அறிவித்தது. இதில், மித்தாலி ராஜ் கேப்டனாகவும், ஹரமன்ப்ரீட் கவுர் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜுலன் கோஸவமி காயம் காரணமாக இந்தத் தொடரில் இடம்பெறவில்லை.
இந்திய அணியில், ஸ்மிரிதி மந்தனா, பூனம் ராவுட், ஜெமிமா ரோட்ரிகுயிஸ், வேத கிருஷ்ணமூர்த்தி, மோன மெஷ்ராம், சுஷ்மா வெர்மா(கீப்பர்), எக்டா பிஸ்ட், பூனம் யாதவ், ராஜேஸ்வரி காயக்வத், ஷிகா பாண்டே, சுகன்யா பரிதா, பூஜா வஷ்ட்ரகர், தீப்தி ஷர்மா உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மித்தாலி ராஜூம், டி20 தொடருக்கு கவுரும் கேப்டனாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.