பேட்டிங் செய்வதற்கு முன்னர் புத்தகம் படித்தது ஏன்?... இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜின் ரகசியம்
பேட்டிங் செய்வதற்கு முன்னர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புத்தகம் படிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
மகளிர் உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை, மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் 71 ரன்கள் குவித்த இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதங்களை பதிவு செய்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். போட்டியின் போது அடுத்ததாக களமிறங்க உள்ள நிலையில், மிதாலி அமைதியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்கான காரணத்தை மிதாலி ராஜ் தற்போது கூறியுள்ளார். இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மிதாலி, புத்தகங்கள் வாசிப்பது எனது விருப்பமான பொழுதுபோக்கு. புத்தகங்களை கிண்டில் சாதனத்தில் வாசிப்பது எனது வழக்கம். ஆனால், மைதானத்துக்குள் கிண்டில் சாதனத்துக்கு அனுமதி இல்லை என்பதால், புத்தகத்தை வாசித்ததாகக் கூறியுள்ளார். தனது பெயரிலான எமோஜி ட்விட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.