மகளிர் கிரிக்கெட்டின் முடிசூடா ராணியாக ஜொலிக்கும் மிதாலி ராஜ்
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பல இளம் வீரர்கள் உருவாவதற்கு ஆதர்ச நாயகனாக எப்படி சச்சின் டெண்டுல்கர் விளங்குகிறாரோ அதேபோல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கும் பெரும் நாயகியாக ஜொலிப்பவர் மிதாலி ராஜ். அண்மை காலமாக மிதாலி ராஜின் பெயர் அதிகமாக கேட்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கு காரணம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் செய்துள்ள சாதனை அத்தகையது. அதவாது டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து பார்மெட்களிலும் சேர்த்து 10,273 ரன்களை குவித்து சாதனையாளராக உருவெடுத்தார். இங்கிலாந்து முன்னாள் வீராங்கனையான சார்லோட் எட்வார்ட்சின் சாதனையை ராஜ் முறியடித்து இப்போது சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மிதாலி ராஜ், மகளிர் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை கடந்து சாதனை படைத்த பெருமையை கொண்டுள்ளார். கடந்த மார்ச்சில் அவர் 7 ஆயிரம் ரன்களை நிறைவு செய்துள்ளார். கடந்த மார்ச்சில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணியின் கேப்டனான மிதாலிராஜ் சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலான போட்டிகளில் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் இதன் மூலம் அவர் பெற்றுள்ளார்.
இதுவரை 217 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7304 ரன்களை குவித்துள்ளார் மிதாலி ராஜ். அதில் மொத்தம் 7 சதங்களும், 58 அரை சதங்களும் அடங்கும். அவரின் சராசரி 51.80. மேலும், சர்வதேச அளவில் 89 டி20 போட்டிகளில் 2364 ரன்களை சேர்த்து, அதில் 17 அரை சதங்களும் விளாசியிருக்கிறார். பொதுவாக மகளிர் கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் அரிதானது, அதனால் இதுவரை அவர் 11 டெஸ்ட்டில் விளையாடி 669 ரன்களை எடுத்துள்ளார். அதில் மொத்தம் 4 அரை சதங்களாகும். இப்போது மிதாலி ராஜ்க்கு 38 வயதாகிறது. மகளிர் டி20 உலகக் கோப்பையுடன் மிதாலி ராஜ் ஓய்வுப் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெருமைமிகு தமிழர்
மிதாலி ராஜ் பிறந்தது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில். வளர்ந்து, குடியேறியது ஐதராபாத்தில். ஆனால் அவரது தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவரது பெற்றோர் பெயர் துரைராஜ் - லீலா. இந்திய மகளிர் அணியில் மிதாலி ராஜின் வருகைக்கு பின்புதான் புதிய வேகம் பெற்றது என கூறலாம். ஏறக்குறைய கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வரும் மிதாலி ராஜ் இந்திய மகளிர் அணியின் பல முக்கிய வெற்றிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். உலகளவில் 6 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை பட்டியலில் மிதாலியும் இடம் பிடித்து இருக்கிறார். இந்திய மகளிர் கிரிக்கெட்டை மிதாலியின் வருகைக்கு முன்பும் பின்பும் என பிரித்துவிடலாம்.
இதுவரை 217 ஒருநாள் கிரிக்கெட் பந்தயத்தில் 7 சதங்கள், 57 அரை சதங்கள், 55 பந்தயங்களில் ஆட்டமிழக்காதது என்பது மட்டுமல்லாமல் மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் சதமடித்த ஐந்து வீராங்கனைகளில் ஒருவர் என்கிற பெருமைக்கும் உரியவர் மிதாலி ராஜ். 1999 ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு 16 வயதில் அறிமுகமானார் மிதாலி ராஜ். அப்போது இந்திய அணியில் மட்டுமல்லாமல் உலகளவில் புகழ்பெற்ற வீராங்கனையாக இருந்தவர்கள் அஞ்சும் சோப்ராவும், நீது டேவிடும். ஆனால் அவர்களாலும், இந்திய மகளிர் அணியை மிகப்பெரிய வெற்றிக்களுக்கு கொண்ட செல்ல முடியவில்லை. ஆனால் மிதாலியின் வருகைக்கு பின்பு நிலைமை தலைக்கீழாக மாறியது.
2006-இல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியை மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பெற்றது. அப்போதுதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை மற்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகளை திரும்பிப் பார்த்தது. இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடையாளமாகிவிட்டார் 38 வயதான மிதாலி என்றால் மாற்றுக் கருத்தில்லை. எப்படி ஆண்களுக்கு கபில்தேவ்வும், கவாஸ்கரும், சச்சினும், தோனியும், கோலியும் வளரும் கிரிக்கெட் தலைமுறையினருக்கு ஒரு இன்ஸ்பிரேஷனோ அப்படிதான் பெண்களுக்கு மிதாலி ராஜ் ஒரு ஆதர்சன வீராங்கனையாக வளம் வருகிறார், எப்போதும் இருப்பார் என நம்புவோமாக.