200 ஆவது ஒருநாள் போட்டி ! உலக சாதனைப் படைத்தார் மிதாலி ராஜ்
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தன்னுடைய 200 ஆவது ஒருநாள் போட்டியில் இன்று களம் காண்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள போட்டியில் இந்தச் சாதனையை அவர் படைக்கவுள்ளார். அதுவும், உலக மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக 200 ஆவது போட்டியில் பங்கேற்பதும் மிதாலி ராஜ்தான், என்பது இந்தியாவுக்கே பெருமை. இந்திய மகளிர் அணி ஒட்டுமொத்தமாக இதுவரை 263 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் மிதாலி ராஜ் மட்டுமே 200 போட்டிகளில் விளையாடிவுள்ளார் என்பது வரலாற்று சாதனை.
ஒருநாள் போட்டிகளில் 7 சதங்கள், 51 அரை சதங்கள், 51 பந்தயங்களில் ஆட்டமிழக்காதது என்பது மட்டுமல்லாமல் மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் சதமடித்த ஐந்து வீராங்கனைகளில் ஒருவர் என்கிற பெருமைக்கும் உரியவர் மிதாலி ராஜ். மிதாலி ராஜ் பிறந்தது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில். வளர்ந்து, குடியேறியது ஐதராபாத்தில். ஆனால் அவரது தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவரது பெற்றோர் பெயர் துரைராஜ் - லீலா.
இந்திய மகளிர் அணியில் மிதாலி ராஜின்வருகைக்கு பின்புதான் புதிய வேகம் பெற்றது என கூறலாம். ஏறக்குறைய கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வரும் மிதாலி ராஜ் இந்திய மகளிர் அணியின் பல முக்கிய வெற்றிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். உலகளவில் 6 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை பட்டியலில் மிதாலியும் இடம் பிடித்து இருக்கிறார். இந்திய மகளிர் கிரிக்கெட்டை மிதாலியின் வருகைக்கு முன்பும் பின்பும் என பிரித்துவிடலாம்.