ஆஸி- வெஸ்ட் இண்டீஸ் போட்டி: கோல்டர் நைல், ஸ்டார்க் சாதனை!

ஆஸி- வெஸ்ட் இண்டீஸ் போட்டி: கோல்டர் நைல், ஸ்டார்க் சாதனை!
ஆஸி- வெஸ்ட் இண்டீஸ் போட்டி: கோல்டர் நைல், ஸ்டார்க் சாதனை!

உலகக் கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில், கோல்டர் நைல், ஸ்டார்க் சாதனை படைத்தனர்.

உலகக் கோப்பை தொடரின் 10வது போட்டியில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 288 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் என்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்த அந்த அணியை, ஸ்மித்தும் கோல்டர் நைலும் அதிரடியாக விளையாடி, தூக்கி நிறுத்தினர். இதனால் அந்த அணி, கவுரமான ஸ்கோரை எட்டியது.

கோல்டர் நைல் 60 பந்துகளில் 92 ரன்னும் ஸ்மித் 73 ரன்னும் அலெக்ஸ் கேரி 45 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிராத்வொயிட் 3 விக்கெட்டுகளையும் தாமஸ், காட்ரெல் மற்றும் ரஸல் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 

ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பின்னர் அதிக ரன்களை வாரிக்கொடுத்தது. அதே நேரம் ஸ்மித் மற்றும் கோல்டர் நைல் கொடுத்த கேட்ச்களை கோட்டை விட்டதும் ஆஸ்திரேலிய அணி, அதிக ரன் குவிக்கக் காரணமாகிவிட்டது.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த அணியில் கீப்பர் ஹோப் 68 (105), கேப்டன் ஹோல்டர் 51 மற்றும் பூரன் 40 ரன்கள் சேர்த்தனர். ஹோல்டரும் ரஸலும் களத்தில் இருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று விடும் என்ற நிலையிலேயே இருந்தது. ஆனால், அவர்கள் விக்கெட்டை இழந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறிவிட்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது, எட்டாவது இடத்தில் இறங்கி அதிக ரன் எடுத்து சாதனை படைத்துள்ளார், கோல்டர் நைல். அவர் 60 பந்துகளில் 90 விளாசி 9 விக்கெட்டாக ஆட்டமிழந்தார். உலகக் கோப்பையில் எட்டாவது இடத்தில் இறங்கி வீரர் ஒருவர் அடித்த அதிகப்பட்ச ரன் இதுதான்.

அதே போல ஒரு நாள் போட்டிகளில், 150 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையை, ஸ்டார்க் நேற்று படைத்தார். 

பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக், 78 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அவரது சாதனை 21 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முறியடிக்கப்பட்டது. ஸ்டார்க் 77 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com