சண்டிகரின் அதிசயம் : மான் கவுர் : 104 வயது தடகள வீராங்கனை 

சண்டிகரின் அதிசயம் : மான் கவுர் : 104 வயது தடகள வீராங்கனை 

சண்டிகரின் அதிசயம் : மான் கவுர் : 104 வயது தடகள வீராங்கனை 
Published on

இந்தியாவுக்காக நரை கூடி கிழப் பருவம் எய்த போதிலும் தடகள களத்தில் அயராமல் ஓடி மூத்தோர்களுக்கான சர்வதேச தடகள விளையாட்டில் பதக்கங்களை வென்று சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறார் 104 வயதான தடகள வீராங்கனை மான் கவுர்.  

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த மான் கவுர் கடந்த 1916 இல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் பிறந்தவர். பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் அரண்மனையில் பணிப்பெண்ணாக வேலை செய்துள்ளார். 

1934 இல் திருமணம் முடிந்த கையோடு கணவர் மற்றும் மூன்று பிள்ளைகள் என குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். 

மான் கவுரின் இரண்டாவது மகன் குருதேவ் சிங் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை தனது மகன் குவித்திருந்ததை பார்த்து தானும் தடகள வீராங்கனையாக உருவாக வேண்டுமென்ற ஆசை மான் கவுருக்கு அவரது 93வது வயதில் வந்துள்ளது. தனது விருப்பத்தை மகனிடம் சொல்லிய அடுத்த நொடியே மறுப்பு ஏதும் சொல்லாமல் அம்மாவுக்கு தடகளத்தில் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துள்ளார் குருதேவ். 

தனக்கு நடை பழக்கிய அம்மாவுக்கு ஓட்டத்தில் பயிற்சி கொடுக்க வேண்டிய டாஸ்க்.

உணவில் முறையான கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டுமென கண்டீஷன் போட்டுள்ளார் குருதேவ். அதை அப்படியே ஏற்றுக்கொண்ட மான் கவுரும் தடகள பயிற்சியை கடந்த 2009 இல் தொடங்கியுள்ளார். 

‘முதன் முதலில் அம்மாவை டிரேக்குக்கு அழைத்து சென்றதும் 400 மீட்டர் ஓட சொல்லி பார்த்தேன். ஆரோக்கியமான உடல் வாகு அம்மாவுக்கு கைகொடுக்க அந்த இலக்கை பொறுமையாக ஓடி கடந்தார். அதை பார்த்ததுமே அம்மாவால் முடியும் என்ற நம்பிக்கை வந்தது’ என்கிறார் குருதேவ். 

தொடர்ந்து மகன் கொடுத்த ஊக்கத்தோடு ஓட்டத்தில் வேகத்தையும், தனது பலத்தையும் கூட்டியுள்ளார் மான் கவுர். 

தினந்தோறும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, தனது வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு ஆறு மணிக்கெல்லாம் பயிற்சி களத்தை அடைந்து விடுவாராம். 

நாற்பது நிமிடங்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்புவாராம். தினமும் 20 கிலோ மீட்டர்  தூரம் ஓடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் அவர். 2009 இல் துவங்கி இன்றுவரை தினந்தோறும் இந்த பயிற்சி அட்டவணையை தான் அவர் பின்பற்றி வருகிறார். 

ஓட்டம் மட்டுமல்லாது குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலிலும் மான் கவுர் பயிற்சி எடுத்து கொள்வாராம்.

ஆரம்பத்தில் தேசிய அளவில் தனது  திறமைகளை வெளிக்காட்டிய மான் கவுர் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டத்திலும், ஈட்டி மற்றும் குண்டு எறிதலிலும் ஒரு ரவுண்டு வந்துள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் 13 தங்க பதக்கங்களை வென்றுள்ளார் அவர். அதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவிலான முதியோர் தடகள போட்டிகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார். 

கனடா, மலேசியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர், தைவான் என சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் மொத்தமாக 31 தங்க பதக்கங்களையும் வென்றுள்ளார். கடந்த ஆண்டு போலந்தில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம், ஈட்டி மற்றும் குண்டு எறிதல் என நான்கு ஈவென்ட்டுகளில் தங்க பதக்கம் வென்றிருந்தார்.

“என் இறுதி மூச்சு வரை ஓடிக் கொண்டே இருக்க  விரும்புகிறேன். என்னை போலவே இந்தியாவில் வளர்கின்ற ஒவ்வொரு பெண் பிள்ளையும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டு, ஆர்வம் இருந்தால் விளையாட்டிலும் கவனம் செலுத்தலாம்” என்கிறார் மான் கவுர்.

உலகிலேயே நூறு வயதை கடந்த அதிவேகமாக ஓடும் தடகள வீராங்கனை என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார் மான் கவுர்.

எல்லோரும் சொல்வது போல மான் கவுர் சண்டிகரின் அதிசயம் தான்.    

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com