2026 காமன்வெல்த்| 190 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார் மீராபாய்.. ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை!
ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் போட்டியில், இந்திய பளுதூக்கல் வீராங்கனை மீராபாய் சானு 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். ஸ்னேட்சில் 85 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோவும் தூக்கி மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி சாதனை படைத்த அவர், 2018, 2022க்கு பின் ஹாட்ரிக் தங்கம் வென்றுள்ளார்.
2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த மூன்றாயிரம் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் தரப்பில் 123 பேர் கொண்ட குழு சென்றுள்ளது.
இந்நிலையில் இன்று கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற மகளிருக்கான 48 கிலோ பளுதூக்குதல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் 85 கிலோவை தூக்கி தங்கத்தை தட்டிச்சென்றார் இந்தியாவின் தங்க மங்கையான மீராபாய் சானு. ஸ்னேட்ச் பிரிவில் 85 கிலோ, க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ என மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி சாதனை படைத்தார் மீராபாய்.
இவர் ஏற்கனவே 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதோடு 2022 காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். இந்தசூழலில் தொடர்ச்சியாக 3வது முறையும் தங்கம் வென்று வரலாற்றில் தடம்பதித்துள்ளார் மீராபாய் சானு. நைஜீரியாவின் ரூத் அசுகுவோ நியோங் வெள்ளியும், மலேசியாவின் ஐரீன் ஜேன் ஹென்றி வெண்கலமும் வென்றனர்.

