பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் 35 பந்தில் சதம் அடித்து மில்லர் சாதனை படைத்தார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தென்னாப்பிரிக்க அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் அம்லாவும் டேவிட் மில்லரும் அதிரடியில் ஈடுபட்டனர். அம்லா 51 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மில்லர் 36 பந்துகளில் 9 சிக்சர், 7 பவுண்டரியுடன் 101 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதன் மூலம் இருபது ஓவர் போட்டிகளில் குறைவான பந்துகளில் சதமடித்த உலக சாதனையை மில்லர் நிகழ்த்தினர். இதையடுத்து அந்த அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி, 141 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் சவுமியா சர்கார் அதிகப்பட்சமாக 44 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது.