அணியை விட்டு விலகுகிறாரா ஜடேஜா? - தொடர் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே

அணியை விட்டு விலகுகிறாரா ஜடேஜா? - தொடர் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே
அணியை விட்டு விலகுகிறாரா ஜடேஜா? - தொடர் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு ஜடேஜா விலகுவதாக வெளியான செய்திகளுக்கு அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். சீசன் தொடங்குவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கேப்டன் பொறுப்பு வகித்த ஜடேஜா முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுத் தந்தார். அவரது ஃபார்மும் கேள்விக்குள்ளானது.

இந்த சீசனில் 10 போட்டியில் விளையாடியுள்ள ஜடேஜா, 116 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். சராசரி 19 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 118 ஆகும். ஜடேஜா நடப்பு சீசனில் அதிகபட்சமாக 26 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதே போன்று பந்துவீச்சிலும் ஜடேஜா 10 போட்டியில் விளையாடி 5 விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ளார்.

இதையடுத்து, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜடேஜா மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். அப்போது பேசிய தோனி, ஜடேஜாவுக்கு கேப்டன்ஷிப் அழுத்தத்தை கையாள முடியவில்லை என்று கூறினார்.

இதனிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இதையடுத்து நடப்பு தொடர் முழுவதிலும் ஜடேஜா விளையாடமாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம்  அறிவித்தது.

இதற்கிடையில்  ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தியது. ஜடேஜாவுக்கும் நிர்வாகத்திற்கும்  இடையே மோதல் இருப்பதால்  அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை சிஎஸ்கே நிறுத்திவிட்டதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் சென்னை அணியுடனான ஜடேஜாவின் பிணைப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில்,‘‘வீரர்கள் அனைவரும் பயோ பபிள் விதிமுறையில் இருப்பதால் அது அவர்களை பைத்தியக்காரத்தனமாக ஆக்குகிறது. அவர்களால் பயோ பபிள்  சூழலை எதிர்கொள்ள முடியவில்லை. பயோ பபிள் விதிமுறைகளால் ஜடேஜா எந்தளவுக்கு பாதிக்கப்பட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. சென்னை அணியில் ஜடேஜா நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. இவருக்கு என்ன காயம் ஏற்பட்டது, கேப்டன் பதவி எந்தளவுக்கு பாதித்தது எனத் தெரியாது. ஆனால் சென்னை அணியுடனான ஜடேஜாவின் பிணைப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது'' என்றார்.

இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு  ஜடேஜா விலகுவதாக வெளியான செய்திகளுக்கு அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார். சிஎஸ்கேவின் வருங்காலத் திட்டங்களில் ஜடேஜா நிச்சயம் உள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படியே அவர் போட்டியிலிருந்து விலகியதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காசி விஸ்வநாதன் விளக்கமளித்தார்.

இதையும் படிக்கலாம்: அன்று ரெய்னா! இன்று ஜடேஜா! நாளை..? திட்டமிட்டு கட்டம் கட்டுகிறதா சிஎஸ்கே நிர்வாகம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com