தடுமாறிய மும்பை, தூக்கி நிறுத்திய பொல்லார்டு - ஹைதராபாத்துக்கு 150 ரன்கள் இலக்கு!
ஷார்ஜாவில் நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணி பேட்டிங் செய்தது. ரோகித் ஷர்மாவும், டி காக்கும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். பவர்பிளே ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களை எடுத்து மும்பை தடுமாறியது.
ரோகித் ஷர்மா 4 ரன்களிலும், டி காக் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இணைந்து 42 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இருப்பினும் 7 பந்துகளில் சூரியகுமார் யாதவ், குருனால் பாண்ட்யா மற்றும் சவுரப் திவாரியின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை தங்கள் பக்கமாக திருப்பினர் ஹைதராபாத் பவுலர்கள்.
இஷான் கிஷனும் 17வது ஓவரில் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்ததால் மும்பையின் பேட்டிங் லைன் அப் டோட்டலாக டேமேஜாகியது. பொல்லார்ட் மட்டும் ஒற்றையாளாக 25 பந்துகளில் 41 ரன்களை குவித்து அதிரடியாக விளையாடினார்.
20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது மும்பை. 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஹைதராபாத் விளையாடி வருகிறது.
ஹைதரபாத் அணிக்காக சந்தீப் ஷர்மா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.