டெத் ஓவரில் சொதப்பிய மும்பை அணி - ஹைதராபாத்திற்கு 163 ரன் இலக்கு
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
மும்பை இண்டியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெற இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால், போட்டியில் பரபரப்பு இருக்கும். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் இரண்டு ஓவர்களில் 5 பவுண்டரிகள் விளாசினார். ஆனால், 24 ரன்கள் எடுத்த நிலையில் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் 17 பந்தில் 23 ரன் எடுத்து அவுட் ஆனார். பின்னர், லெவிஸ் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.
ஹர்திக் பாண்ட்யா வந்த வேகத்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். ஆனால், 10 பந்துகளில் 18 ரன் எடுத்து அவரும் ஆட்டமிழந்தார். விக்கெட் ஒருபுறம் வீழ்ந்தாலும், டி காக் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். பொல்லாடும் 10 ரன்னில் ஏமாற்றினார். இறுதியில், மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
டி காக் 58 பந்துகளில் 69 ரன்களுடனும், குர்ணல் பாண்ட்யா 3 பந்தில் ஒரு சிக்ஸர் உட்பட 9 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது மூன்று விக்கெட் சாய்த்தார்.
வழக்கமாக டெத் ஓவர்களில் மும்பை வீரர்கள் சிறப்பாக ரன் சேர்ப்பார்கள். ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு என யாரேனும் ஒருவர் சிக்ஸர்களாக விளாசுவர். ஆனால், இந்தப் போட்டியில் டெத் ஓவர்களில் பெரிதாக ரன் அடிக்கப்படவில்லை. அதுவும் புவனேஸ்வர் குமார் 19வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.