`அவ்ளோ ஆசை... உலகக்கோப்பை மேல!’- கோப்பையை கட்டிப்பிடித்தவாறே உறங்கும் மெஸ்ஸி
17 ஆண்டுகால தாகத்திற்கு பிறகு உலகக்கோப்பையை வென்று தன்வசப்படுத்தியுள்ள நட்சத்திர வீரர் மெஸ்ஸி, உலகக்கோப்பையை தழுவியவாறே படுக்கையறையில் உறங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை 2022ல் பிரான்சுக்கு எதிரான பரபரப்பான இறுதி ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி பெனால்டிசூட் முறையில் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 36 வருடங்களுக்கு பிறகு எந்த காலத்திற்கும் நிலைத்து நிற்கும் வெற்றிக்கு அழைத்துச்சென்றார், லியோனல் மெஸ்ஸி. 2022 டிசம்பர் 18ஆம் தேதி கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வென்று 3ஆவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது அர்ஜெண்டினா அணி. இதற்கு முன், 1978 மற்றும் 1986ல் அந்த அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் கோப்பையை வென்றதற்கு பிறகு, மெஸ்ஸி தனது மற்றும் அவரது குடும்பத்தினரின் நம்பமுடியாத படங்களை கோப்பையுடன் Instagram-ல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி பரவி வருகிறது.
கோப்பையை கட்டிப்பிடித்தவாறு உறங்கும் மெஸ்ஸி!
மெஸ்ஸி தனது படுக்கையறையில் உலகக்கோப்பையை கட்டிப்பிடித்தவாறு உறங்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஸ்பானிஷ் மொழியில் "குட் மார்னிங்" என்று ஸ்மைலி கண்கள் எமோஜி உடன் சிரித்த முகத்துடன் எழுதி பதிவிட்டுள்ளார்.
ஒரு படம் அவர் தனது படுக்கையில் போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவதைக் காட்டுகிறது. மற்றொரு புகைப்படத்தில் ”buen día”(குட் டே) என பதிவிட்டுள்ளார் மெஸ்ஸி.
அவருடைய இந்தப் பதிவு அரை மணி நேரத்தில், 2.6 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களைக் குவித்துள்ளது. வைரலான அந்தப் புகைப்படம் மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கருத்துகளையும் பெற்று வருகிறது.
கமெண்டில் பதிவிட்டுவரும் ரசிகர்கள், "உலகின் ராஜா" என்றும் "நீங்கள் எல்லா காலத்திலும் சிறந்த வீரர்" என்றும், "நிச்சயமாக மிகவும் விரும்பப்பட்ட புதிய பதிவு இது" என்றும் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் பலர் தங்கள் விருப்பங்களை காட்ட விதவிதமாக எமோஜிகளைப் பகிர்ந்து வருகின்றனர்.