இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட்: மெல்போர்ன் மைதானமும் தயார் - காரணம் என்ன?
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3-வது டெஸ்ட் போட்டி, சிட்னியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக மெல்போர்ன் மைதானமும் அப்போட்டியை நடத்த தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக நடந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2 ஆவது டெஸ்ட் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலிய நம்பிக்கை நட்சத்திரமான டேவிட் வார்னர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கிடையேயான 3-ஆவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி சிட்னியில் தொடங்க உள்ளது. ஆனால் சிட்னி பகுதியில் கொரோனா தீவிரமடைய தொடங்கியுள்ளதை தொடர்ந்து அங்கு டெஸ்ட் போட்டி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆவது போட்டியை நடத்த மெல்போர்ன் மைதானமும் தயார் நிலையில் இருக்கும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 3ஆவது டெஸ்ட் எங்கு நடக்கும் என்பது குறித்த உறுதியான முடிவு 2ஆவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.