ஐபிஎல்லில் மேலும் 2 அணிகள் - போட்டா போட்டி போடும் நிறுவனங்கள்!
ஐபிஎல் தொடரில் இடம்பெற உள்ள மேலும் இரு அணிகளை முடிவு செய்தவதற்கான ஏலம் துபாயில் இன்று நடைபெற உள்ளது.
கால்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால் போன்றவையே உலகளவில் பணம் கொழிக்கும் விளையாட்டு போட்டிகள். கிரிக்கெட் ஏதோ ஒரு மூலையில்தான் என்ற கருத்தாக்கத்தை உடைத்தெறிந்துள்ளது ஐபிஎல். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வர்த்தகம். பலகோடி ரசிகர்கள் என உலகின் டாப் 10 விளையாட்டுத் தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது ஐபிஎல். 2008ல் தொடங்கிய ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் மட்டுமே இருந்த நிலையில் இனி அது 10 ஆக உயர உள்ளது.
ஐபிஎல்லில் இடம்பெறும் மேலும் 2 அணிகள் எவை என்பதற்கான போட்டியில் அகமதாபாத், லக்னோ, கட்டாக், தர்மசாலா, இந்தூர், கவுகாத்தி நகரங்கள் காத்துள்ளன.
இவற்றில் ஒன்றை ஏலம் எடுக்க அதானி, ஜிண்டால் பவர் அண்டு ஸ்டீல், ஆர்பிஎஸ்ஜி, டோரன்ட் ஃபார்மா, அரபிந்தோ ஃபார்மா, கோட்டக் குழுமம், இந்துஸ்தான் டைம்ஸ் மீடியா என 22 நிறுவனங்கள் கோடிகளுடன் வரிசைகட்டி நிற்கின்றன. தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதியும் அணியை வளைக்கும் போட்டியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஐபிஎல் அணியை வாங்கும் போட்டியில் உலகப் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைட்டட்டும் குதித்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் அணிகளை ஏலம் எடுக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்வதாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா 2 ஆயிரம் கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். ஆனால் இருக்கும் போட்டியை பார்த்தால் ஒரு அணி 5 ஆயிரம் கோடி ரூபாய் வரைகூட ஏலம் போக வாய்ப்புள்ளது என்றும், இந்த 2 அணிகளால் மட்டும் பிசிசிஐ 10 ஆயிரம் கோடிகளை அள்ள வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர் விளையாட்டு வர்த்தகத்துறையினர்.
2008ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் மும்பை அணியை அதிகபட்சமாக 450 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார் முகேஷ் அம்பானி. அத்தொகை இப்போது 10 மடங்கு அதிகரித்துள்ளதே ஐபிஎல்லின் அசுரவேக வளர்ச்சிக்கு ஒரு உதாரணம். ஐபிஎல்லில் மைதானத்திற்குள் அடிக்கப்படும் சிக்சர்களும் பவுண்டரிகளும் ரசிகர்களை பரவசப்படுத்தும் நிலையில் மைதானத்திற்கு வெளியே கோடிகளை கொட்டிக்கொடுத்து அணியை சொந்தமாக்க நடைபெறும் தொழிற்போட்டியும் படு சூடாகத்தான் இருக்கிறது.