அணிக்கு திரும்பிய மேக்ஸ்வெல் ! உலகக் கோப்பைக்கு முன் இந்தியா-ஆஸி பலப்பரீட்சை!

அணிக்கு திரும்பிய மேக்ஸ்வெல் ! உலகக் கோப்பைக்கு முன் இந்தியா-ஆஸி பலப்பரீட்சை!
அணிக்கு திரும்பிய மேக்ஸ்வெல் ! உலகக் கோப்பைக்கு முன் இந்தியா-ஆஸி பலப்பரீட்சை!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களான மேக்ஸ்வெல் மற்றும் மிட்சல் மார்ஷ் இருவரும், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில், முதல் இரண்டு போட்டிகளை வென்ற இந்திய அணி 2-0 என வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 1ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், இதுவரை 3 ஆஸ்திரேலிய வீரர்கள் பல்வேறு காரணங்களினால் தாயகம் திரும்பியுள்ளனர். இதற்கிடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பிய 4 ஆஸ்திரேலிய வீரர்கள்!

நடந்துவரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். குதிகாலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹசல்வுட் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற்று விளையாடாமல் இருந்தார். இந்நிலையில் காயம் குணமாகாததால் தொடரிலிருந்து வெளியேறி, முதல் வீரராக ஆஸ்திரேலியா திரும்பினார்.

அதனைத்தொடர்ந்து 2ஆவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் வீசிய பவுன்சரால் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு, முழங்கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் கடைசி 2 போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், காயம் குணமாகாததால் அவரும் குடும்பத்துடன் சிட்னி திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சுழற்பந்துவீச்சாளரான ஆஸ்டன் ஆகர் ஆஸ்திரேலிய உள்நாட்டு தொடர்களில் பங்குபெற்று விளையாடுவதற்காக தாயகம் திரும்பியுள்ளார். ஏற்கனவே காம்ரன் க்ரீன், மிட்சல் ஸ்டார்க் முதலிய வீரர்கள் காயம் காரணமாக முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த நிலையில், கேப்டர்ன் பேட் கம்மின்ஸும் குடும்ப சூழ்நிலை காரணமாக தாயகம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அணிக்கு திரும்பிய மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ்!

தொடர்ந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்பி வரும் நிலையில், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் அணியின் ஸ்குவாடை அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. காயம் காரணமாக கடந்த பல மாதங்களாக அணியில் இடம்பெறாமல் இருந்த மேக்ஸ்வெல் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும், மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளனர். மேலும் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்ஸனும் அணிக்குள் திரும்பியுள்ளார்.

ஒருநாள் தொடர் ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்பாட், ஆஸ்டன் ஆகர், அலெக்ஸ் கேரி, கேம்ரான் க்ரீன், டிரவிஸ் ஹெட், ஜோஸ் இங்க்லிஸ், மார்னஸ் லபுசனே, மிட்சல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஷேம்பா.

ஒருநாள் உலக கோப்பைக்கு முன் இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

2023ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. முழுக்க முழுக்க இந்திய ஆடுகளங்களில் மட்டுமே உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால், இதனை பயன்படுத்திகொள்ளும் முனைப்பிலேயே ஆஸ்திரேலிய அணி களம்காண்கிறது. இதனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுக்குமே இந்த ஒருநாள் தொடரானது முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

3 ஒருநாள் போட்டிகள் தொடரானது மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் சென்னை ஆடுகளங்களில் நடைபெறவுள்ளது. அணிக்குள் ஆல்ரவுண்டர்கள் மேக்ஸ்வெல் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் திரும்பியுள்ளது, ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. ஒருநாள் தொடர் மார்ச் மாதம் 17ஆம் தேதி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com