மேக்ஸ் Vs 100 | 100 பேரை வீழ்த்திய வெர்ஸ்டாப்பன்.. கடைசி இடத்திலிருந்து தொடங்கி முதலிடம்!
எஃப்1 கார் பந்தயத்தில் 4 முறை உலக சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், 'Max vs 100' என்ற சிறப்பு கோ-கார்ட்டிங் பந்தயத்தில் 100 போட்டியாளர்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ரெட் புல் அமைப்பின் சார்பில் சில்வர்ஸ்டோனில் நடத்தப்பட்ட 'Max vs 100' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோ-கார்ட்டிங் பந்தயத்தில் 100 போட்டியாளர்களையும் முந்தி 4 முறை எஃப்1 உலக சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் அபார வெற்றி பெற்றுள்ளார். அமைப்பாளர்கள் 30 சுற்றுகள் மற்றும் 75 நிமிடங்கள் அவகாசம் அளித்திருந்த நிலையில், முதல் சுற்றிலேயே 60 பேரைக் கடந்த அவர், வெறும் 14 சுற்றுகளில் 100 பேரையும் முந்தி வெற்றி பெற்றார். பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், வெர்ஸ்டாப்பன் 101-ஆவது ஆளாகக் கடைசியில் இருந்து காரை இயக்கினார்.
பந்தயம் தொடங்கிய முதல் சுற்றிலேயே (Lap 1) ஏற்பட்ட நெரிசலையும் திருப்பங்களையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, 60-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை ஒரே சுற்றில் வெர்ஸ்டாப்பன் முந்தினார். பந்தயம் நடைபெற்ற 35 நிமிடங்களில், சராசரியாக ஒவ்வொரு 21 வினாடிகளுக்கும் ஒரு போட்டியாளரை வெர்ஸ்டாப்பன் முந்திச் சென்று அசத்தினார். பெரும்பாலான சுற்றுகளில் முன்னிலையில் இருந்த டச்சு F1 செய்தியாளர் ஜாக்கி மார்ட்டென்ஸ் (Jacky Martens) 2-ஆம் இடத்தையும், ரெட் புல் குழுவின் தொழில்நுட்ப வல்லுநர் லூயிஸ் ஆஸ்லர் (Lewis Osler) 3-ஆம் இடத்தையும் பிடித்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், “100 கோ-கார்ட்டுகள் எனக்கு முன்னால் நிற்பதைப் பார்த்தபோது சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் பந்தயம் செல்லச் செல்ல பழைய நாட்களுக்குச் சென்று கார்ட்டிங் செய்தது போன்ற சிறந்த அனுபவமாக மாறியது" என தெரிவித்துள்ளார்.

