இலங்கை சென்றுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி காலேயில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 316 ரன்கள் குவித்தது. 317 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள், இலங்கை பவுலர்களுக்கு பதிலடி கொடுத்தனர். அந்த அணி 47.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் சாலமோன் மிரே சதம் (112 ரன்) விளாசினார்.
இந்த தோல்வி குறித்து இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறும்போது, எங்கள் பந்து வீச்சும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது. முக்கியமான நேரத்தில் முக்கியமான சில கேட்சுகளை தவறவிட்டுவிட்டோம். இப்படி இக்கட்டான சூழ்நிலையில் கேட்சுகளை தவறவிடுவது மோசமானது. இதனால்தான் தோல்வியடைந்துள்ளோம். சிறந்த பீல்டர்களே கேட்சை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது. அதே போல பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இதுபற்றி தேர்வாளர்களிடம் பேச இருக்கிறேன். நடந்த தவறுகளை மறந்துவிட்டு அடுத்தப் போட்டியில் புதிதாக களமிறங்குவோம்’ என்றார்