60 ஆண்டுகளில் விம்பிள்டனில் யாரும் செய்யாத சாதனை... ஓரங்கட்டியவர்கள் முன் சாதனை படைத்த மார்கெட்டா!

விம்பிள்டனில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று முதல்முறையாக சாம்பியனாக மாறியுள்ளார் செக் நாட்டைச் சேர்ந்த மார்கெட்டா வோண்ட்ரூசோவா.
Marketa Vondrousova
Marketa VondrousovaTwitter

உலக அரங்கில் அனைத்து விளையாட்டுகளிலும் ஒவ்வொரு முறையும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று நடைபெற்ற விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியானது, வரலாற்றில் புதிய ஒரு மைல்கல் சாதனையை எழுதியுள்ளது.

சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் செக் நாட்டைச்சேர்ந்த மார்கெட்டா வோண்ட்ரூசோவா மற்றும் துனிசியா நாட்டைச் சேர்ந்த ஆன்ஸ் ஜபியர் என்ற இரண்டு இளம் வீரங்கனைகள் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் ஒருவேளை ஆன்ஸ் ஜபியர் வெற்றிபெற்றால் கிராண்ட்ஸாம் பட்டம் வென்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணி என்ற பெருமையை அவர் பெறுவார்; போலவே மார்கெட்டா வோண்ட்ரூசோவா வெற்றிபெற்றால் ‘60 ஆண்டு கால வரலாற்றில், முதல் தரவரிசையில் இடம்பெறாத ஒரு வீராங்கனை கிராண்ட்ஸ்லாம் வெல்கிறார்’ என்ற பெருமையை அவர் பெறுவார் என்ற நிலை இருந்தது.

மேலும் இருவரில் யார் வெற்றிபெற்றாலுமே அது அவர்களுக்கு முதல் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பதால், இரு வீராங்கனைகளின் ஆதரவாளர்களும் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர்.

60 ஆண்டுகளாக யாரும் செய்யாத சாதனையை செய்து, சாம்பியனான மார்கெட்டா!

ஜூனியர் டென்னிஸ் வீராங்கனையாக இருந்த போது உலகின் நம்பர் 1 வீரராக தன்னை நிலைநிறுத்திய மார்கெட்டா, 19 வயதில் பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியை எட்டினார். ஆனால் அங்கு அவர் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டியிடம் நேர் செட்களில் படுதோல்வியடைந்து வெளியேறினார். பின்னர் காயங்களால் பாதிக்கப்பட்ட அவரை டென்னிஸ் உலகம் பின்னுக்கு தள்ளியது. களத்தில் நின்று விளையாட வேண்டியவர், பார்வையாளராக வேடிக்கை பார்க்கும் நிலைக்கு சென்றார்.

இந்நிலையில் தற்போது விடாமுயற்சியோடு மீண்டுவந்திருக்கும் வோண்ட்ரூசோவா, இன்றைய இறுதிப்போட்டியில் சரிக்கு சமமான பலம் கொண்ட ஆன்ஸ் ஜபியரை இரண்டு நேர் செட்களில் 6-4, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த வெற்றியின் மூலம் 60 ஆண்டுகளில் சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்காத ஒரு வீரர், இறுதிப்போட்டியில் பங்கேற்றது மட்டுமல்லாமல் சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றுள்ளார் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு 1963ஆம் ஆண்டில் டென்னிஸ் ஐகானாக பார்க்கப்படும் பில்லி ஜீன் முதல் தரவரிசையில் இடம்பெறாத வீரராக இறுதிப்போட்டிவரை முன்னேறினார். ஆனால் அவர் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது வெற்றிபெற்று புதிய சாதனையை படைத்திருக்கும் மார்கெட்டா பில்லி ஜீனை விட ஒருபடி மேலாக சென்றுள்ளார்.

தொடர்ந்து இரண்டு இறுதிப்போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆன்ஸ் ஜபியர்

கடந்த 2022ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆன்ஸ் ஜபியர், கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த எலினா ரைபாகினாவிடம் தோல்வியுற்று சாம்பியன் பட்டத்தை நழுவவிட்டார். இந்நிலையில் மீண்டும் தன்னுடைய கனவிற்காக போராடிய ஆன்ஸ் ஜபியர் இம்முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் தோற்றால் இறுதிப்போட்டியில் தான் தோற்பேன் என்பது போல, மீண்டும் ஒரு ஃபைனலில் தோல்வியடைந்துள்ளார் ஜபியர்.

தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு ஃபைனல்களில் தோல்வியுற்ற நிலையில் மனமுடைந்த ஆன்ஸ் ஜபியர், மைதானத்திலேயே கண்ணீர் விட்டார். தொடர் முழுவதும் அற்புதமான நகர்த்தல்கள் மற்றும் ஷாட்கள் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஆன்ஸ் ஜபியர், மீண்டும் மீண்டு வந்து கிராண்ட்ஸ்லாம் வெல்ல வேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் ஆசையும்!

Marketa Vondrousova
கடந்த ஆண்டு தோல்விக்கு பழி தீர்த்த ஆன்ஸ் ஜபியர்! நடப்பு சாம்பியன் எலினா காலியிறுதியில் தோல்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com