சிஎஸ்கே-வுக்கு மார்க் வுட், டாட்டா: திரும்புகிறார் தீபக்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதே நேரம் காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த தீபக் சாஹர் அணிக்குத் திரும்புகிறார்.
பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்தத் தொடரில், ஆரம்பம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ’காயம்’ பாடாய்ப் படுத்தி வருகிறது. பயிற்சியின் போது முரளி விஜய் காயம் அடைந்தார். டுபிளிசிஸும் காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்தார். பின்னர் முதல் போட்டியில் மிடில் ஆர்டரில் கலக்கும் கேதர் ஜாதவ் காயமடைந்து தொடரில் இருந்தே விலகினார்.
இரண்டாவது போட்டியில் ’சின்னத் தல’ சுரேஷ் ரெய்னா காயமடைந்தார். இதனால் ஒரு போட்டியில் விளையாடவில்லை. பிறகு அவர் மீண்டு வந்தார். இந்தத் தொடரில் சிஎஸ்கே அணியின் முதுகெலும்பாக இருக்கும் அம்பதி ராயுடுவும் காயமடைந்தார். ஆனால் அவர் தேறிவிட்டார். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் முதுகு வலியால் அவதிப்பட்டார், கேப்டன் தோனி. அடுத்தப் போட்டிக்குள் அவர் தயாராகிவிட்டார்.
(தீபக் சாஹர்)
இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர், காயமடைந்தார். இரண்டு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என்ற மருத்துவர்கள் கூறியதால் ஓய்வெடுத்து வருகிறார். தனது தந்தையின் திடீர் இறப்பு காரணமாக தென்னாப்பிரிக்கா சென்றார் இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி. இப்போது அவர் அணிக்குத் திரும்பிவிட்டார்.
இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட், இங்கிலாந்து திரும்புகிறார். 28 வயதான மார்க் வுட், அந்நாட்டின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. முதல் போட்டி வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக அவர் இங்கிலாந்து சென்றுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியான, சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் மோதிய போது, சிஎஸ்கே-அணியில் இடம்பெற்ற மார்க் வுட், 4 ஓவர்கள் வீசி 49 ரன்களை வாரி வழங்கினார். இதனால் மற்றப் போட்டிகளில் அவர் இறக்கப்படவில்லை.
(மார்க் வுட்)
‘மார்க் வுட் இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்வதால் அணிக்கு பாதிப்பில்லை. இன்னொரு இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி இருக்கிறார்’ என்று சிஎஸ்கே அணி தெரிவித்துள்ளது. சிஎஸ்கே அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த தீபக் சாஹர் களமிறங்குகிறார்.