மனிஷ் பாண்டே, குல்தீப், தாகூருக்கு வாய்ப்பு: இந்தியா பேட்டிங்!
இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி இன்று 4-வது போட்டியில் களமிறங்குகிறது.
கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடக்கும் இந்தப் போட்டியின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் வெற்றிப்பயணத்தை தொடருவதில் இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இதிலும் அடுத்த போட்டியிலும் வென்றால்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம்பெற முடியும் என்பதால் இலங்கை அணியும் தீவிரம் காட்டும் என்று தெரிகிறது.
இந்நிலையில் டாஸ் வென்ற கோலி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அணியில், மனிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தோனிக்கு இது 300-வது போட்டி என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

