“லாஸ்ட் பால் நோ பால்” எந்த அம்பயரும் பார்க்கலயா ? - கொந்தளிக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்

“லாஸ்ட் பால் நோ பால்” எந்த அம்பயரும் பார்க்கலயா ? - கொந்தளிக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்
“லாஸ்ட் பால் நோ பால்” எந்த அம்பயரும் பார்க்கலயா ? - கொந்தளிக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை பெற்றுள்ள வெற்றியில் ‘நோ பால்’ விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

2019 ஐபிஎல் தொடரின் 7வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரோகித் ஷர்மா 48 (33), சூர்யகுமார் 38 (24), ஹர்திக் பாண்ட்யா 32 (14) மற்றும் யுவராஜ் சிங் 23 (12) ரன்கள் சேர்த்தனர். பெங்களூர் அணியில் சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் டி வில்லியர்ஸ் 70 (41), விராட் கோலி 46 (32) மற்றும் பார்திவ் படேல் 31 (22) ரன்கள் குவித்தனர். மும்பை அணியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்த போட்டியின் கடைசி 2 ஓவரில், 22 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பெங்களூர் அணி இருந்தது. 19வது ஓவரை வீசிய பும்ரா 5 ரன்களை மட்டுமே கொடுத்து விக்கெட்டையும் கைப்பற்றி தனித்துவத்தை வெளிப்படுத்தினார். பின்னர் கடைசி ஓவர் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மலிங்கா பந்துவீசினார். அவரது முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கப்பட்டது. இருப்பினும் அடுத்தடுத்த பந்துகளில் ஒரு சில ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் போட்டி கடுமையானது. கடைசிப் பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பேட்டிங் செய்த டி வில்லியர்ஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 

ஆனால் மலிங்கா வீசிய அந்தப் பந்து ‘நோ பால்’ என்பது பின்னர் தான் தெரியவந்தது. அதனை மட்டும் நடுவர் சரியாக ‘நோ பால்’ என அறிவித்திருந்தால், அடுத்த பந்து ‘ஃப்ரீ ஹிட்’ எனவே ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும். இதனை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பெங்களூர் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ‘கிரிக்கெட் விளையாட்டு இவ்வளவு நவீன மயமாகியுள்ளது. அத்தனை கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் இப்படி ஒரு தவறா? இது மும்பையின் வெற்றியே இல்லை” என அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com