கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு 20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி ஏற்கனவே முன்னேறிவிட்ட நிலையில், இந்தியாவுடன் யார் மோதுவது என்ற போட்டியில் இன்று இலங்கை, வங்கதேசம் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, வங்கதேசம் அணியின் துல்லியமான பந்து வீச்சியில் திணறியது. தொடக்க ஆட்டகாரராக இறங்கிய குணதிலகா மற்றும் மெண்டீஸ் முறையே 4,11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குசல் பெராரா அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். அவர் 40 பந்துகளில் 61 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேற இறுதியில் கேப்டன் திசாரா பெராரா அதிரடியில் இறங்கினார். அவர் 37 பந்துகளில் 3 சிக்சர் 3 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் சேர்த்தது.
அடுத்து விளையாடிய வந்த வங்கதேச அணியில், தொடக்க ஆட்டக்காரர் லிடான் தாஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற மற்றொரு தொடக்க வீரர் தமின் இஃபால் தன் பங்கிற்கு அரை சதம் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த இரு ஆட்டங்களில் தொடர்சியாக அரை சதம் அடித்து அசத்திய முஷ்பிகியூர் ரஹீம் 28 ரன்களில் வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது. இறுதி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒடானா வீசிய ஓவரின் மூன்றாவது பந்தை முகமதுல்லா பவுண்டரி விரட்ட அடுத்த பந்தில் இரண்டு ரன் சேர்க்க இலங்கை ரசிகர்களிடம் சோகம் தொற்றிக் கொண்டது. ஒவரின் 5 வது பந்தை முகமதுல்லா சிக்சருக்கு விரட்ட வங்கதேசம் 160 ரன்களை எட்டி இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால், 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை தோற்கடித்து, வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 18 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளன.