பேட்ஸ்மேன்களை குழப்பிய தூஸ்ரா முரளிதரன் பிறந்த தினம் !
இப்போது வரை உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை கொண்டவர் இலங்கை அணியின் சூழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவரின் 46 ஆவது பிறந்தநாளான இன்று, உலக கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த முத்தையா முரளிதரன் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். முத்தையா முரளிதரன் இலங்கை ரசிகர்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, தமிழர்களுக்கும்தான். ஆம், முத்தையா முரளிதரன் ஒரு தமிழர்.
இலங்கை கிரிக்கெட் அணி 90களின் காலக் கட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது 38 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. பந்துவீச்சு சற்று பலவீனமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் முத்தையா முரளிதரன் இலங்கை அணியில் களமிறங்கினார். சில போட்டிகளிலே தனது மாயாஜால சுழற்பந்துவீச்சின் மூலம் இலங்கை அணிக்கு வெற்றிகளை தேடி தர ஆரம்பித்தார். முரளி தனது ஆரம்ப காலத்தில் சிறப்பாகவே செயல்பட்டார். முதல் மூன்று ஆண்டுகளில் தான் விளையாடிய 23 டெஸ்ட் போட்டிகளில் 81 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினார். தனது 18ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவரது பந்துவீச்சுக்கு நடுவர் தொடர்ந்து "நோ-பால்" வழங்கினார். சர்ச்சையான முறையில் இவரது பந்துவீச்சு இருப்பதாக எதிரணியினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனால் இவரது பந்துவீச்சு பலமுறை ஐசிசியால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வளவு சோதனைகளையும் கடந்து பந்துவீச்சில் ஒரு மைல்கலை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்தச் சாதனையும் சோதனைக்கு பின்னரே தான் அவருக்கு கிடைத்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தான் பல்வேறு சோதனையை தாண்டி இந்தச் சாதனையை எட்டினார். அதுவும் ஒரு சுழற்பந்து வீச்சாளரை வீழ்த்தி அந்த சாதனை நிகழ்த்தினார். இந்தியா வீரர் பிரகயன் ஓஜாவின் விக்கெட்டுதான் அது.
கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 1300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முரளிதரன் ஆடிய காலம் இலங்கை அணிக்கு பொற்காலமாக விளங்கியது. இலங்கை அணி உலகக்கோப்பை தொடரில் வென்ற போட்டிகளில் இவரின் பங்கு அளப்பரியது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு இவ்வளவு பெரிய கவுரவத்தை ஏற்படுத்தி தந்த முரளிதரன் ஒரு இலங்கை தமிழர். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டை கைப்பற்றி உலக சாதனை படைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி அன்று அனைத்து விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கிரிக்கெட் இருக்கும் வரை முத்தையா முரளிதரன் எனும் மாயவித்தை சுழற்பந்து வீச்சாளரை காலம் மறக்கவே மறக்காது.