கீப்பரால் தடுக்கப்பட்ட பந்து ‘மேஜிக்’ போல் கோலாக மாறியது
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டியில், கோல் கீப்பரால் தடுக்கப்பட்ட தடுக்கப்பட்ட பந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டும் கோலாக மாறியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
விளையாட்டு போட்டிகளின் போது சில நேரங்களில் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. அதேபோல், தாய்லாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றிலும் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. பாங்காங் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தாய்லாந்து நாட்டின் சட்ரி அங்தோங் அணிகளுக்கு இடையிலான 18 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்றது. தாய்லாந்து நாட்டின் ராணி சிரிகிட் நினைவு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்ததால், மாரத்தான் பெனால்டி சூட் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போதும், 19-19 என்ற நிலையில் இருந்த போது பாங்காங் அணிக்கு இறுதி வாய்ப்பு கிடைத்தது.
பாங்காங் வீரர் பந்தை கோல் முனை நோக்கி அடிக்க, அதனை தாய்லாந்து கோல் கீப்பர் லாவகமாக தடுத்தார். அவர் மீது பட்டு பந்து மேல் நோக்கி சென்று விட்டது. பந்தை தடுத்துவிட்ட மகிழ்ச்சியில் தாய்லாந்து கோல் கீப்பர் மகிழ்ச்சியில் முன்னோக்கி ஓடினார். ஆனால் சற்று நேரத்தில் எல்லாம் மாறிவிட்டது. மேல் நோக்கிச் சென்ற பந்து கோல் கம்பத்திற்கு சற்று முன்னாள்தான் விழுந்தது. பின்னர் மெல்ல மெல்ல வந்து கோல் கம்பத்திற்குள் சென்று விட்டது. இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. பாங்காங் வீரரும் இதனை கண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார். இது மேஜிக் போலவே நடந்துவிட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.