15-வது சீசனில் மரண மாஸ் காட்டிய லக்னோ, கொல்கத்தா அணிகள் - இறுதி பந்து வரை நிலவிய த்ரில்

15-வது சீசனில் மரண மாஸ் காட்டிய லக்னோ, கொல்கத்தா அணிகள் - இறுதி பந்து வரை நிலவிய த்ரில்
15-வது சீசனில் மரண மாஸ் காட்டிய லக்னோ, கொல்கத்தா அணிகள் - இறுதி பந்து வரை நிலவிய த்ரில்

66-வது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் மோதிய நிலையில், கடைசி பந்து வரை த்ரில் நிலவியதுடன் இந்த சீசனின் மிகச் சிறந்த போட்டியாக அமைந்துள்ளது.

நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் சூப்பர் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஏற்கனவே அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசன் முழுவதும் அபாராமாக விளையாடி, 13 இன்னிங்சில் 10 வெற்றி, 3 தோல்வி பெற்று 20 புள்ளிகளுடன் முதல் ஆளாக பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதையடுத்து இரண்டாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வகையில் மற்றொரு அறிமுக அணியான லக்னோ அணியும், பிளே ஆஃப் சுற்றின் வாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில் கொல்கத்தா அணியும் நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் மோதின.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, துவக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே..எல். ராகுல் களமிறங்கினர். ஆனால் யாரும் எதிர்பாராதவகையில் குயிண்டன் டி காக் சரவெடியாக கொல்கத்தா பந்து வீச்சை எதிர்கொண்டார். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே புவிண்டரிகள் விளாசிய டி காக், அதன்பிறகு டிம் சவுதி வீசிய ஓவரிலும் பவுண்டரிகளாக இறங்கி அடித்தார்.

அதன்பிறகு 3-வது ஓவரில் உமேஷ் வீசிய பந்துவீச்சில் டி காக் கொடுத்த அற்புதமான கேட்சை அபிஜித் தவறவிட, அதுதான் நேற்று லக்னோ அணி வரலாற்று சாதனை புரிய மிகப் பெரிய சம்பவமாக அமைந்தது. தொடர்ந்து டி காக் நாலா திசையிலும் பந்துகளை சிதறடித்து 10 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் விளாசி வாணவேடிக்கை காட்டினார். 36 பந்துகளில் முதல் 50 ரன்களை எடுத்த டி காக், அடுத்த 23 பந்துகளில் மேலும் 50 ரன்களை எடுத்து சதம் கடந்தார்.

தொடர்ந்து பட்டாசை பந்துகளை கையாண்ட டிகாக் 70 பந்துகளில் 140 ரன்கள் எடுத்தார். இதேபோல் மற்றொரு துவக்க வீரரான கே.எல். ராகுல் நிதானமாக விளையாடினார். தன் பங்கு அவரும் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி 51 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். இதனால் கொல்கத்தா அணியின் நிலை பரிதாபமானநிலையில், இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் லக்னோ அணி விக்கெட்டுகள் இழப்பின்றி 210 ரன்கள் எடுத்தது.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தும் வகையிலும், பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பிலும் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் ஓப்பனர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் அபிஜித் தோமர் களமிறங்கினர். ஆனால், மொசின் கான் பந்து வீசிய ஓவரிலேயே டக் அவுட்டாகி வெங்கேடேஷ் அய்யர் அதிர்ச்சியளித்தார். இதேபோல் மற்றொரு துவக்க வீரரான அபிஜித் தோமரும், மொசின் கான் வீசிய 3-வது ஓவரில் 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சியளித்தார்.

ஆனால், அதன்பிறகு களமிறங்கிய நிதிஷ் ராணா மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்தினர். சிறப்பாக ஆடிவந்த நிதிஷ் ராணா, தன் பங்குக்கு அதிரடியாக விளையாடி 9 பவுண்டரிகள் விளாசினர். 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில், கிருஷ்ணப்பா பந்துவீச்சில் ஸ்டாயினிஸிடம் கேட் கொடுத்து நடையை கட்ட ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு சாம் பில்லிங்ஸ் நிதானமாக விளையாடி 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 24 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து வந்த ரஸ்ஸல் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 77 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங், லக்னோ அணிக்கு வாண வேடிக்கை காட்டினார். ஆட்டம் பரபரப்பாகவும், முக்கிய வீரர்கள் அவுட்டாகிய சூழ்நிலையில் 7-வது விக்கெட் பாட்னர்ஷிப்புக்கு ரிங்கு சிங் - சுனில் நரேன் ஜோடி அதிரடி காட்டினர். இறுதி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்தில் அவர் சிக்சர் விளாச போட்டியில் பெரும் பரபரப்பு தொற்றி கொண்டது. கடைசி 4 பந்தில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட 3-வது பந்திலும் சிக்சர் பறந்தது.

4-வது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 5-வது பந்தில் ரிங்கு சிங் கவர்ஸ் திசையில் அடிக்க முயற்சிக்க அந்த பந்தை ஏவின் லீவிஸ் அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தினார். 15 பந்தில் ரிங்கு சிங் 40 ரன்கள் எடுத்து எதிரணிக்கு பயம்காட்டியநிலையில் அவர் அவுட்டானதும் கொல்கத்தா ரசிகர்கள் வருத்தமடைந்தனர். மிக உளிதாக இறுதி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட அந்த பந்தை எதிர்கொண்ட உமேஷ் யாதவ் போல்டானார். சுனில் நரேன் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதி வரை இருந்தார்.

இதனால் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதையடுத்து 18 புள்ளிகளுடன் அடுத்த அறிமுக அணியான லக்னோ அணியும் இரண்டாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா அணி இறுதி பந்து வரை தனது சிறப்பான போராட்டத்தை காட்டினாலும் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் பெற்று தோல்வியடைந்ததால், பிளே ஆஃப்ஸ் வாய்ப்பிலிருந்து மும்பை, சென்னைக்கு அடுத்து 3-வது அணியாக வெளியேறியது. எனினும் மிக அற்புதமாக விளையாடிய இரு அணிகளுக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com