லார்ட்ஸ் டெஸ்ட்: கடைசி நாளில் தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

லார்ட்ஸ் டெஸ்ட்: கடைசி நாளில் தோல்வியை தவிர்க்குமா இந்தியா?
லார்ட்ஸ் டெஸ்ட்: கடைசி நாளில் தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 5-ஆவது நாள் ஆட்டத்தை இந்தியா தோல்வியை தவிர்க்க போராடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இந்தியா இழந்தபோதும் புஜாரா மற்றும் ரஹானே 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

புஜாரா தன்னுடைய வழக்கமான கிளாசிக் பேட்டிங்கால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்தார். அவரை ஆட்டமிழக்க எவ்வளவோ முயற்சித்தார் கேப்டன் ஜோ ரூட். ஆனால், அவர் நங்கூரம்போல் பேட்டில் நிலைத்து ஆடினார். இருப்பினும், புஜாரா 206 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்களை சேர்த்த நிலையில் மார்க்வுட் பந்துவீச்சில் அவர் அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிய 14 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் மொயின் அலி சுழலில் எட்ஜாகி பட்லரிடம் கேட்ச் கொடுத்து 61 ரன்களில் வெளியேறினார் ரஹானே. ஜடேஜா 3 ரன்களில் மொயின் அலி சுழலில் போல்ட்டாகி வெளியேறினார். கடைசி நேரத்தில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

களத்தில் ரிஷப் பண்ட் (14) மற்றும் இஷாந்த் ஷர்மா (4) விளையாடி வருகின்றனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை எடுத்துள்ளது. 8 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் மோசமான வெளிச்சம் காரணமாக போட்டி முன் கூட்டியே நிறுத்தப்பட்டது.

இன்று கடைசி நாள் ஆட்டம். 50 ரன்கள் வரை இந்திய அணி அடிக்கும் பட்சத்தில் 200 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயிக்க முடியும். அது இந்திய அணிக்கும் நெருக்கடி இல்லாமல் இருக்கும். இருப்பினும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் கைகளில் தான் இந்திய அணியின் வெற்றியோ, டிராவோ உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com