அடுத்த டெஸ்ட் போட்டிகளிலும் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம்!
கொல்கத்தாவை அடுத்து நாக்பூர், டெல்லியில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படுமென தெரிகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையே, கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது. முதல் இன்னிங்கிஸில் இலங்கை பந்துவீச்சாளர் லக்மல் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், ஷமி ஆகியோரின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. கடைசி நாளில், இலங்கை 7 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி டிரா ஆனது.
போட்டி முடிந்த பின் பேசிய இந்திய பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல், ‘அடுத்த இரண்டு வருடம் வெளிநாடுகளில் அதிக போட்டிகளில் விளையாட இருக்கிறோம். அதற்கு ஏற்ற மாதிரி சவாலான ஆடுகளங்களில் பயிற்சி பெறுவது அவசியம். கொல்கத்தா மைதானம் அப்படி அமைந்தது. அடுத்தப் போட்டிகளிலும் சவாலான பிட்ச் அமைந்தால் பயிற்சியாக இருக்கும்’ என்றார்.
அடுத்த போட்டி நாக்பூரில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. மூன்றாவது போட்டி டெல்லியில் டிசம்பர் 2-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி, ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சென்று விளையாட இருக்கிறது. அந்த நாட்டின் ஆடுகள தன்மைக்கு ஏற்ப, இந்திய ஆடுகளங்களை உருவாக்க இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இந்திய கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக்கொண்டதாகவும் அதன்படியே கொல்கத்தா மைதானம் அமைக்கப்பட்டதாகவும் டெல்லி, நாக்பூர் மைதானங்களும் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.