ரோகித், ரஹானே, பாண்ட்யா... நடுவரிசையில் யார்? பாங்கர் விளக்கம்!

ரோகித், ரஹானே, பாண்ட்யா... நடுவரிசையில் யார்? பாங்கர் விளக்கம்!

ரோகித், ரஹானே, பாண்ட்யா... நடுவரிசையில் யார்? பாங்கர் விளக்கம்!
Published on

தென்னாப்பிரிக்காவுடன் இன்று நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நடுவரிசையில் இறங்கும் வீரர்கள் என்பது பற்றி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறினார். 

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் உத்வேகத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. 

இந்நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறும்போது, ‘ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப களத்தில் இறங்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்-ஆக இருந்தால் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் அணி களமிறங்கும். பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தால் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்க முடிவு செய்துள்ளோம். காயத்தில் இருந்து தவான் மீண்டிருப்பது பலமாக இருக்கிறது. அதே நேரம் ஜடேஜா காய்ச்சலில் இருந்து குணமடையவில்லை. அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறோம். நடுவரிசை பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மா, ரஹானே, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரில் யாருக்கும் இடம் கிடைக்கும் என்று கேட்கிறார்கள். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து அதை இன்று முடிவு செய்வோம். பந்துவீச்சாளர்களில் இஷாந்த் சர்மா, தென்னாப்பிரிக்காவில் ஏற்கெனவே விளையாடிய அனுபவம் உள்ளவர். அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் சுழற்சி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும். வீரர்கள், மனரீதியாக ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். அதனால் சீதோஷ்ணநிலை, எதிரணி வீரர்கள் பற்றிய கவலை இல்லை’ என்றார்.

கேப்டவுன் மைதானத்தில் இந்திய அணி 4 டெஸ்டில் விளையாடி 2ல் தோல்வியும், 2ல் டிராவும் கண்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com