”உம்ரான் போல் லோக்கல்ல நிறையபேர் கிடைப்பாங்க” - பாக். வீரரின் பேச்சும் பதானின் பதிலடியும்!

”உம்ரான் போல் லோக்கல்ல நிறையபேர் கிடைப்பாங்க” - பாக். வீரரின் பேச்சும் பதானின் பதிலடியும்!
”உம்ரான் போல் லோக்கல்ல நிறையபேர் கிடைப்பாங்க” - பாக். வீரரின் பேச்சும் பதானின் பதிலடியும்!
Published on

இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக் குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோஹைல் கான், உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் எல்லாம் எங்கள் லோக்கல் வட்டாரத்திலேயே கிடைப்பார்கள்” என கேலியாக பேசியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இந்தியாவின் இளம் வேகப்பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக், தன்னுடைய வேகத்தில் மிரட்டி வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதை அடுத்து அவர் இந்திய அணியில் எடுக்கப்பட்டு விளையாடி வருகிறார். அவருடைய வேகத்தால் மிரட்டி வரும் உம்ரான் மாலிக், சராசரி வேகமாக 145கிமீ வேகத்திலும், அதிகபட்ச வேகமாக 155கிமீ வேகத்திலும் வீசிவருகிறார். இதுவரை 8 ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், முறையே 13 விக்கெட்டுகள் மற்றும் 11 விக்கெட்டுகள் என மொத்தமாக 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

வலைபயிற்சியில் 163.9 கீமீ வேகத்தில் வீசிய உம்ரான்!

இந்தியாவின் எதிர்கால வேகப்பந்துவீச்சாளராக பார்க்கப்படும் உம்ரான் கான், போட்டிக்கு போட்டி தன்னை மெருகேற்றிக்கொண்டே தான் இருந்து வருகிறார். டி20 போட்டிகளில் 10 என அதிக எகானமியோடு இருந்தாலும், ஒருநாள் போட்டிகள் 6.45ஆக தான் இருந்துவருகிறார். லைன் மற்றும் லெந்துகளில் சிறப்பாக வீசி வரும் உம்ரான் மாலிக், பலநேரம் எதிரணி பேட்டர்களின் கண்களின் பார்வையை கூர்மையாக இருக்குமாறு வைத்துவிடுகிறார். அந்தளவு வேகத்தில் மிரட்டிவருகிறார்.

கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக 150 கீமீ வேகத்தில் அவர் வீசிய பந்து நியூசிலாந்தின் மிட்சல் விக்கெட்டை பதம்பார்த்த போது, ஸ்டம்பில் இருந்து பறந்த பெய்ல் 30யார்ட் வட்டத்தை தாண்டி பறந்து சென்றது. மேலும் முன்னதாக வலைப்பயிற்சியில் அவர் வீசிய பந்தானது 163.9 கிமீ வேகமாக பதிவானது. சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் 161.3 கிமீ வேகத்தில் வீசியதே இதுவரை ரெக்கார்டாக இருந்து வரும் நிலையில், அவரால் சரவதேச கிரிக்கெட்டிலும் வீசமுடியும் என்று பல கிரிக்கெட் வல்லுநர்களால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் உம்ரான் மாலிக் குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோஹைல் கான், உம்ரான் மாலிக் போன்று 10-15 வீரர்கள் பாகிஸ்தானின் உள்நாட்டு போட்டிகளிலேயே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

உம்ரான் மாலிக் போல எங்கள் உள்நாட்டு வட்டாரத்தில் நிறைய கிடைப்பார்கள்!

யூடியூப் சேனல் ஒன்றில் பேசியிருக்கும் அவர், “ உம்ரான் மாலிக் நல்ல பவுலர் தான். அவருடைய பந்துவீச்சை நான் ஒரு சில போட்டிகளில் பார்த்திருக்கிறேன். அவருடைய ரன்னப் மற்றும் லைன்-லெந்துகளும் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் ஒரு வேகப்பந்துவீச்சாளராக பார்த்தால், அவர் வீசும் 150-155கிமீ வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்களை என்னால் பாகிஸ்தானில் 10-15 பேரை விரல்விட்டு எண்ண முடியும். பாகிஸ்தானில் உள்நாட்டு வட்டாரத்திலேயே அப்படிபட்ட வீரர்களை பார்க்க முடியும். லாகூரில் வந்து பாருங்கள் அப்படிபட்ட பவுலர்களை தான் நாங்கள் உருவாக்கி வருகிறோம்” என்று பேசினார்.

மேலும், “ உம்ரான் மாலிக் போன்ற பல பந்துவீச்சாளர்களால் எங்கள் உள்நாட்டு கிரிக்கெட் நிரம்பியுள்ளது. அப்படி எங்கள் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பான வீரர்கள் தான். அதில் தற்போது எல்லோருக்கும் தெரியும் வீரர்களை சொல்லவேண்டுமானால் ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் போன்றவர்கள். ஆனால் இவர்களை தாண்டி என்னால், உங்களுக்கு நிறைய பெயர்களைக் கொடுக்க முடியும்” என்று கூறினார்.

இர்ஃபான் பதான் போல பாகிஸ்தானின் ஒவ்வொரு தெருக்களிலும் பவுலர்கள் கிடைப்பார்கள்!

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் உம்ரான் மாலிக் குறித்து கருத்து தெரிவித்ததை குறிப்பிட்டு, முன்னதாக நிகழ்ந்தவற்றை நினைவுகூர்ந்து பதிலடி கொடுத்துள்ளார் இந்திய ரசிகர் ஒருவர்.

அவர் பதிவிட்டிருக்கும் அந்த பதிவில், ”தற்போது பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷோஹைல் கான், உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் பாகிஸ்தானின் உள்நாட்டு வட்டாரத்தில் நிறைய கிடைப்பார்கள் என்று கூறியுள்ளார். அதே போன்று தான் முன்னர், பாகிஸ்தானின் ஜாவேத் மியான்டத் இர்பான் பதான் போன்ற வீரர்கள் பாகிஸ்தானின் ஒவ்வொரு தெருவிலும் கிடைப்பார்கள் என்று கூறியிருந்தார். அதற்கு பிறகு இர்பான் பதான் தன்னுடைய பவுங்கால் பதிலளித்திருந்தார். பாகிஸ்தானியர்கள் குறைவாக பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய அந்த பதிவில் கருத்து தெரிவித்திருக்கும் இர்பான் பதான், “ இது போன்ற கருத்துகளை சொல்லி அவர்கள் கவனம் பெற விரும்புகிறார்கள், இதையெல்லாம் புறக்கணித்துவிடுங்கள்” என்று கூறியுள்ளார். 2004ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 2-1 என்று தொடரை கைப்பற்றி அசத்தியது. அதில் 19 வயது வீரராக களமிறங்கிய இர்பான் பதான், 3 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com