இந்தியாவிற்கு எதிரான டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் லெவிஸ் 62 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு டி-20 போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றிய பின், டி-20 போட்டி நேற்று நடந்தது. டாஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தவானுடன் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இருவரும் அடித்து ஆட, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. தவான் 23 ரன்னில் ரன் அவுட் ஆக, அடுத்து ரிஷாப் பன்ட் வந்தார். அவர் மெதுவாக ஆடினாலும் கோலி மட்டையை சுழற்றினார். இவர்கள் அடித்ததைப் பார்த்தால் அணியின் ஸ்கோர் 250-ஐ தாண்டும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக, 39 ரன்களில் (22 பந்து) அவர் அவுட் ஆனார் கோலி. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் பவுண்டரிக்கு பறக்கவிட்டார் பந்துகளை. ஆனால் 48 ரன்னில் (29 பந்து) அவர் போல்டாக, அடுத்து வந்த தோனி 2 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் தந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்திய அணி 190 ரன்கள் சேர்த்தது. கேதர் ஜாதவ் 4 ரன்கள், ஜடேஜா 13 ரன்கள், அஸ்வின் 11 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டெய்லர், வில்லயம்ஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சாமுவேல்ஸ் 1 விக்கெட்டை எடுத்தார். அடுத்து 191 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ். அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லும் எவின் லெவிஸும் களமிறங்கினர். கெய்ல் தடுமாறி, குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் லெவிஸ் இந்திய பந்துவீச்சாளர்களை விளாசி தள்ளினார். 62 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து அசத்தினார் அவர். அந்த அணி 18.3 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. சாமுவேல்ஸ் 36 ரன்கள் எடுத்தார். லெவிஸுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.