இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு டி-20க்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். கடைசியாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைப்பெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அந்தப்போட்டியில் 63 ரன்கள் குவித்து அசத்தினார். பின் அவர் அணியில் இடம்பெறவில்லை. இங்கிலாந்து தொடருக்கு பின்னர், இந்திய அணி கடந்த ஆண்டு மேற்கு இந்திய தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகளுடன் டி20 போட்டியில் விளையாடியது இந்தப் போட்டிகளுக்கு சுரேஷ் ரெய்னா அழைக்கப்படவில்லை. இதற்கு யோ-யோ டெஸ்ட்டில் அவர் தேர்வு பெறவில்லை என்று காரணம் கூறப்பட்டது.
இந்நிலையில் கடுமையான பயிற்சிக்குப் பின், அந்த தேர்வில் சுரேஷ் ரெய்னா தேர்வு பெற்றார். இதையடுத்து மாநிலங்களுக்கு இடையேயான சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் அதிரடி சதம் அடித்து மிரட்டினார். இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தக்க வைத்துக்கொண்டது. மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை அடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் டிச. 1, 2016ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியில்தான் ரெய்னா அறிமுகமானார். இந்தப்போட்டியில் 15 பந்துகளை எதிர்க்கொண்டவர் ஆட்டமிழக்காமல் 3 ரன்களை குவித்தார். அதன் பின்னர் 2011ல் டர்பனில் நடைப்பெற்ற போட்டியில் 29 பந்துகளை எதிர்கொண்ட ரெய்னா, 41 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 9 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 8 ஆட்டத்தில் பேட்டிங் செய்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத்தான் தனது சதத்தை பதிவு செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்சமாக 101 ரன்களையும், குறைந்தபட்சமாக 3 ரன்களையும் எடுத்துள்ளார். மொத்தமாக 250 ரன்களை குவித்துள்ளார்.