ஒரு வருடத்துக்குப் பின் இலங்கை அணியில் மலிங்கா!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. யார்க்கர் ஸ்பெஷலிஷ்டான இவர், சமீப காலமாக அந்த அணியில் தேர்வுசெய்யப்படாமல் ஓரங்கப்பட்டு வந்தார். இலங்கை சென்றிருந்த இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் கடந்த வருடம், செப்டம்பர் மாதம் பங்கேற்ற மலிங்கா, அதன் பிறகு அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு கூறியது.
இதற்கிடையே, இலங்கை விளையாட்டு அமைச்சரின் விமர்சனத்துக்கு காட்டமாக பதில் அளித்திருந்தார் மலிங்கா. அதற்காகத்தான் அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.
’எனக்கு ஏன் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. 25, 26 வயதுள்ள வீரருக்கு ஓய்வு கொடுத்தால் நியாயம் இருக்கிறது. ஏனென்றால் அவருக்கு விளையாட காலம் இருக்கிறது. என்னை போன்ற வீரர்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுவோம். இந்தச் சூழ்நிலையில் எங்களுக்கு ஓய்வு என்று சொன்னால், இனி விளையாட வாய்ப்பு கிடைக்குமா? இதற்கான காரணம் தெரியவில்லை. 2019- உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அதில் நான் இடம்பெற்றால் அதுதான் என் கடைசி தொடராக இருக்கும்’ என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் மலிங்கா.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 14-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அதில், ஒரு வருடத்துக்கு பிறகு மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார். ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி தடை விதிக்கப்பட்டிருந்த தனுஷ்கா குணதிலகாவும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
அணி விவரம்:
மேத்யூஸ் (கேப்டன்). குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், உபுல் தாரங்கா, தினேஷ் சண்டிமால், தனுஷ்கா குணதிலகா, திசாரா பெரேரா, தஷூன் சனகா, தனஞ்செயா டி சில்வா, அகிலா தனஞ்செயா, தில்ருவான் பெரேரா, அமிலா அபோன்சோ, கசுன் ரஜிதா, சுரங்கா லக்மல், துஷ்மந்தா சமீரா, லசித் மலிங்கா.