99 ரன்கள் விளாசிய கெயில் - வெற்றிக் கனியை சுவைக்குமா பெங்களூர்?
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 173 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐபில் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல். ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் களமிறங்கனர்.
ராகுல் மற்றும் கெய்ல் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 66 ரன்கள் சேர்ததனர். ராகுல் 15 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த அகர்வால் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் தலா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும், கெயில் மறுபுறம் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டு இருந்தார். இவர் அரைசதம் கடந்து அதிரடியை தொடர்ந்தார். அதனால் விக்கெட்டுகள் விழுந்தாலும் பஞ்சாப் அணி ரன்கள் உயர்ந்து கொண்டுதான் இருந்தது. 15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 122 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பிறகு கடைசி 5 ஒவர்களில் கெயிலின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 51 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை கெயில் ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உதவியுடன் 99 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. பெங்களுர் அணி தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதனையடுத்து 174 ரன்கள் இழக்காக கொண்டு களமிறங்கிய பெங்களுர் அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் சேர்த்து விளையாடிவருகிறது. கோலி 35 ரன்களுடனும் டிவில்லியர்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.