ஐபிஎல்: பஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இயக்குனராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது, கேப்டன் விராத் கோலியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் நியமிக்கப்படுவார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் அந்த அணியின் (கிரிக்கெட் செயல்பாடு) இயக்குன ராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்ஜ் பெய்லி பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் நேற்று நடந்த பஞ்சாப் அணியின் போர்டு மீட்டிங்கில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மும்பை இந்தி யன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட ஐ.பி.எல் அணிகளுக்கு இதற்கு முன் பயிற்சியாளராக இருந்துள்ளார் கும்ப்ளே.
பஞ்சாப் அணி, இதுவரை ஐ.பி.எல் கோப்பையை வென்றதில்லை. கடந்த இரண்டாண்டுகளாக அந்த அணி பிளே - ஆப் சுற்றைக் கூட தாண்டவில்லை. இதனால் அந்த அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அணியின் கேப்டன் அஸ்வின், டெல்லி அணிக்கு மாற இருப்பதாகக் கூறப்படுகிறது.