சிட்னி டெஸ்ட்: 300 ரன்னுக்கு ஆஸி. ஆல் அவுட்!

சிட்னி டெஸ்ட்: 300 ரன்னுக்கு ஆஸி. ஆல் அவுட்!
சிட்னி டெஸ்ட்: 300 ரன்னுக்கு ஆஸி. ஆல் அவுட்!

சிட்னியில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 300 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து, பாலோ ஆன் பெற்றது.

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் ’சுவர்’ புஜாரா 193 ரன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 159 ரன், மயங்க் அகர்வால் 77 ரன், ஜடேஜா 81 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில், லியான் 4, ஹசல்வுட் 2, ஸ்டார்க் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸும் உஸ்மான் கவாஜாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 24 ரன் எடுத்திருந்தது. மார்கஸ் ஹாரிஸ் 19 ரன்னுடனும் கவாஜா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. கவாஜா 27 ரன் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மார்னஸ் வந்தார். அவரும் ஹாரிஸும் சிறப்பாக ஆடி கொண்டிருந்தனர். அணியின் ஸ்கோர் 128 ஆக இருந்தபோது ஹாரிஸ் விக்கெட்டை, ஜடேஜா வீழ்த்தினார். அவர் 79 ரன் எடுத்திருந்தார். அடுத்து மார்ஷ் களமிறங்கினார். அவரை (8 ரன்)யும் ஜடேஜா வீழ்த்த அடுத்து டிராவிஸ் ஹெட், மார்னஸுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினார். 

முகமது ஷமியின் பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து மார்னஸ் ஆட்டமிழந்தார். அவர் 38 ரன் எடுத்திருந்தார். அடுத்து டிராவிஸ் ஹெட் விக்கெட்டை குல்தீப் சாய்த்தார். பின்னர் வந்த கேப்டன் பெய்னும் குல்தீப் சுழலில் விக்கெட்டை பறிகொடுக்க, அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்தது. ஹேண்ட்ஸ்கோம்பும் (28) கம்மின்ஸும் (25) ஆடி கொண்டிருந்தபோது, போதிய வெளிச்சம் இல்லாததால் நேற்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இன்று, நான்காவது நாள் ஆட்டம் தொடங்க வேண்டும். காலையில் இருந்தே மழை தொடர்து பெய்ததால் ஆட்டம் தொடங்கப்படவில்லை. மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்காததால், ரசிகர்களும் வீரர்களும் காத்திருந்தனர். பின்னர் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கம்மின்ஸ் விக்கெட்டை, குல்தீப் தூக்கினார்.

அடுத்து ஸ்டார்க் வந்தார். 37 ரன் எடுத்திருந்த ஹேண்ட்ஸ்கோம்பை, பும்ரா போல்டாக்கினார். அடுத்து வந்த லியானையும் ஹசல்வுட்டையும் குல்தீப் வீழ்த்த, ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் 300 ரன்னுக்கு முடிவுக்கு வந்தது.  ஸ்டார்க் 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந் தார். இதையடுத்து அந்த அணி பாலோ ஆன் பெற்றது.


இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். ஷமி, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளும் பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

வெற்றிக்கு இன்னும் 322 ரன் என்ற தேவை என்ற நிலையில் பாலோ ஆன் பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com