2-வது ஒரு நாள் போட்டி: குல்தீப் சுழலில் சுருண்டது நியூசி!
நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மவுன்ட் மாங்கனுயி-ல் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில், இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 324 ரன் எடுத்தது. ரோகித் சர்மா 87 ரன்களும் தவான் 66 ரன்களும் விராத் கோலி 43 ரன்களும் ராயுடு 47 ரன்களும் தோனி 48 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 325 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி, தனது ஆட்டத்தை தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக குப்திலும் முன்றோவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். அணியின் ஸ்கோர் 23 ஆக இருந்தபோது குப்தில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் வில்லியம்சன் வந்தார். எட்டாவது ஓவரை வீசிய ஷமி பந்தில், மூன்று சிக்சர்கள், ஒரு பவுண்டரி விளாசிய அவர், ஷமி பந்திலேயே போல்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த டெய்லர், லாதம், நிக்கோலஸ், கிராண்ட்ஹோம், சோதி என யாருமே நிலைத்து நிற்கவில்லை. பிரேஸ்வல் மட்டும் அடித்து ஆடினார். அவர் 46 பந்தில் 57 ரன் எடுத்த நிலையில் புவனேஷ்வர்குமார் பந்தில் ஆட்டமிழக்கவும் போட்டி முடிவுக்கு வந்தது.
அந்த அணி, 40.2 ஓவரில் 234 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. 90 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், சாஹல் தலா 2 விக்கெட்டும், ஷமி, கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.