’சைனாமேன்’ குல்தீப், கும்ப்ளே தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா
இந்தியாவின் ’சைனாமேன்’ வகை பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், அனில் கும்ப்ளேவின் தயாரிப்பு என்று சுரேஷ் ரெய்னா கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா. வயது 30. சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்கும் இவர், அணிக்கு திரும்ப போராடி வருகிறார். சமீபத்தில் நடந்த யோ யோ உடல் தகுதி டெஸ்டில் இவர் தேர்வு பெறாததால் அணியில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ’சமீபத்திய போட்டிகளில் குல்தீப் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கான பாராட்டுகள் எல்லாம் அனில் கும்ப்ளேவுக்குத்தான் போக வேண்டும் என நினைக்கிறேன். அவர்தான் அவரை உருவாக்கியவர். ஐபிஎல் போட்டிகளின் போது குல்தீப், எப்போதும் கும்ப்ளேவுக்கு மெசேஜ் தட்டிவிட்டுக்கொண்டே இருப்பார். அதோடு ஆஸ்திரேலிய சைனாமேன் வகை பந்துவீச்சாளர் பிராட் ஹாக்கும் அவரை உருவாக்கினார். இவர்கள் இருவரும்தான் குல்தீப்பின் பந்துவீச்சை மாற்றியவர்கள். இந்திய அணிக்கு திரும்ப நான் கடுமையாக பயிற்சி பெற்றுவருகிறேன். உடல் தகுதியை வளர்க்க ஜிம்மில்தான் அதிக நேரம் செலவழிக்கிறேன். எனக்கான நேரம் வரும் என காத்திருக்கிறேன்’ என்று கூறினார்.
யோ யோ டெஸ்ட்டில் தோல்வி அடைந்தது பற்றி கேட்டபோது, ‘அதுபற்றி பிசிசிஐ-யிடம் கேளுங்கள்’ என்றார் ரெய்னா.