சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்தியாவை சேர்ந்த முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை, இளம் வீரர் குல்தீப் யாதவ் பெற்றார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தச்சாதனையை அவர் நிகழ்த்தினார். சேட்டன் சர்மா, கபில்தேவ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஏற்கனவே ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். உத்திரபிரதேசத்தை சேர்ந்த 22 வயது வீரரான குல்தீப் யாதவ், தமது ஒன்பதாவது ஒருநாள் போட்டியில் இந்த ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.
போட்டிக்குப் பின் பேசிய குல்தீப், ‘முதல் 5 ஓவர்களில் சரியான பகுதியில் பந்து வீச சிரமப்பட்டேன். கிரிக்கெட்டில் இது சஜகம்தான். கடந்த போட்டியில் எனது பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார் மேக்ஸ்வெல். இந்தப் போட்டியில் 3 பந்தில் 3 விக்கெட்டுகளை எடுத்தேன். இது மகிழ்ச்சியாக இருந்தது. இது எனக்கு ஸ்பெஷல். அந்த பந்துகளை வீசுவதற்கு முன்பு, தோனியிடம் எப்படி வீசலாம் என்று கேட்டேன். ’உனக்கு எப்படி தோணுதோ அப்படியே வீசு’ என்று ஐடியா சொன்னார். அதையே கடைபிடித்தேன். அதோடு கேப்டன் விராத் கோலியும் என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார். இவர்கள் இருவருக்கும் நன்றி’ என்றார்.