ரோகித் அதிரடியால் 195 ரன்கள் குவித்த மும்பை : இலக்கை எட்டுமா கேகேஆர்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 195 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டான் டி காக் ஒரு ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்த நிலையில் சூர்யகுமார் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய ரோகித் அரை சதத்தை கடந்து அதிரடியை தொடர்ந்தார். இதற்கிடையே 13 பந்துகளை சந்தித்த திவாரி 21 ரன்களில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து 54 பந்துகளில் 80 ரன்களை விளாசிவிட்டு ரோகித் ஷர்மா பெவிலியன் திரும்பினார்.
பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 18 (13) ஹிட் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் சிவம் மவி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.