ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி - கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் செய்த ஏற்பாடு

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி - கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் செய்த ஏற்பாடு
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி - கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் செய்த ஏற்பாடு

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியை முன்னிட்டு கிரிக்கெட் ரசிகர்களின் பயண வசதிக்காக அடுத்த 2 நாட்கள் நள்ளிரவு நேரத்தில், மெட்ரோ ரயிலை இயக்க கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வந்தநிலையில், நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி மகராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் மும்பையில் உள்ள 4 மைதானங்களில் லீக் போட்டிகள் நடைபெற்று வந்தது.

புதிதாக இந்தாண்டு லக்னோ மற்றும் குஜராத் அணிகள் சேர்க்கப்பட்டநிலையில், சூப்பர் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதில் 5 முறை சாம்பியனான மும்பை அணியும், நடப்பு சாம்பியனும், 4 முறை கோப்பை வென்ற சென்னை அணியும் மோசமான ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பிடித்தன. ஆனால் அறிமுக அணிகளான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தன.

இதேபோல், வெற்றி, தோல்வி என மாறி மாறி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றன. மகாராஷ்ரா மாநிலத்தில் சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்ததையடுத்து, தற்போது பிளே ஆஃப் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் பிளே ஆஃப் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இதேபோல், லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் இரண்டாவது பிளே ஆஃப் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி, முதல் பிளே ஆஃப் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் விளையாடும். இரவு 7.30 மணிக்கு துவங்கும் இந்தப் போட்டிகள் 11.30 மணி வரை நடைபெறும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் நள்ளிரவு நேரத்தில் பயணிக்க ஏதுவாக இரவு 12 மணிக்கு மெட்ரோ ரயிலை இயக்க கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவலையும் கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கடைசி பிளே ஆஃப் போட்டி மற்றும் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்தி மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com