நடராஜன், உம்ரான் மாலிக் வேகத்தில் திணறிய கொல்கத்தா! சன்ரைசர்ஸ்க்கு 176 ரன்கள் இலக்கு!
நடராஜன், உம்ரான் மாலிக் வேகத்தில் சிக்கி திணறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு 176 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடுகிறது.
2022 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹாட்ரிக் வெற்றியைக் குறிவைத்து சன்ரைசர்ஸ் அணியும் களமிறங்கின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா அணி தரப்பில் ஆரோன் பிஞ்ச், வெங்கடேஷ் அய்யர் ஓப்பனர்களாக களமிறங்கினர். மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து 2 வது ஓவரிலேயே வெளியேறினார் பிஞ்ச். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆட, நடராஜன் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார் வெங்கடேஷ். அடுத்து வந்த சுனில் நரைன் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க, அடுத்த;g பந்தில் நடராஜன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். கொல்கத்தா அணியின் டாப் ஆர்டரை ஆட்டம் காணச் செய்தார் நடராஜன்.
அடுத்து வந்த நிதிஷ் ரானா, ஸ்ரேயாசுடன் சேர்ந்து பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடினார். பவர்ப்ளேவில் திணறிய ஸ்கோரை நல்ல நிலைக்கு எடுத்து வந்த போது, அடுத்த “வேகம்” வந்தது. உம்ரான் மாலிக் வீசிய வேகப்பந்தில் க்ளீன் போல்டாகினார் ஸ்ரேயாஸ் அய்யர். அடுத்து வந்த ஷெல்டான் ஜாக்சனும் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் நடராஜனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒருபக்கம் தனியாளாக பவுண்டரி, சிக்ஸர் என நிதிஷ் ரானா விளாசிக் கொண்டிருக்க, பார்ட்னர் இல்லாமல் பரிதவித்தபடியே விளையாடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து ரஸல் வந்து துணைநிற்க, ரானாவும் அதிரடி காட்டி விளையாடினார். 54 ரன் குவித்த நிலையில் ரானாவும் நடராஜன் பந்துவீச்சில் அவுட்டாக, ஸ்கோர் மீண்டும் தள்ளாடத் துவங்கியது. ரஸல் மட்டும் போராட, அடுத்து வந்தவர்கள் விறுவிறுவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. ரஸல் 45 ரன்களுடன் களத்தில் இருந்தார். தற்போது 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது சன் ரைசர்ஸ்.