பலத்த பாதுகாப்புடன் சென்னை வந்த கொல்கத்தா அணி!
சென்னை - கொல்கத்தா அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்று வரும் நிலையில், ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் சென்னையில் நாளை நடைபெறவுள்ள போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் விளையாடுவதற்காக தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று மாலை சென்னை வந்தடைந்தது.
கொல்கத்தா அணி வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதேபோன்று அடையாறில் உள்ள தனியார் ஹோட்டலில் இருந்து பயிற்சிக்காக சேப்பாக்கம் மைதானத்திற்குச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. போராட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இருந்தாலும், சென்னையில் இருந்து போட்டிகளை மாற்றும் திட்டமில்லை என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கேள்விக்கு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.