டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை விரட்டி போராடி வீழ்ந்தது கொல்கத்தா! ஸ்ரேயாஸின் அரைசதம் வீண்

டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை விரட்டி போராடி வீழ்ந்தது கொல்கத்தா! ஸ்ரேயாஸின் அரைசதம் வீண்
டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை விரட்டி போராடி வீழ்ந்தது கொல்கத்தா! ஸ்ரேயாஸின் அரைசதம் வீண்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 216 ரன்கள் என்ற கடின இலக்கை எட்ட இயலாமல் 171 ரன்கள் மட்டுமே குவித்து போராடி வீழ்ந்தது கொல்கத்தா அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் துவங்கிய 19-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பவுலிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணி தரப்பில் பிருத்வி ஷாவும் டேவிட் வார்னரும் ஓப்பனர்களாக களமிறங்கினர். தொடர்ந்து சொதப்புவதாக கடும் விமர்சிக்கப்பட்ட வார்னர் இந்த ஆட்டத்தில் துவக்கத்திலே அதிரடி காட்டினார். கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட உமேஷ் யாதவ் பந்துகளை எல்லைக்கோட்டுக்கு எளிதாக விரட்டினார் பிருத்வி ஷா.

தன் பங்குக்கு வார்னரும் அடித்து ஆட ரன் ரேட் 10க்கு மேல் ஜெட் வேகத்தில் பயணிக்கத் துவங்கியது. ஒருவழியாக வருணின் சுழலில் க்ளீன் போல்டாகி வெளியேறினார் பிருத்வி ஷா. 29 பந்துகளை மட்டுமே சந்தித்து 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி அரைசதம் கண்டு வெளியேறினார் பிருத்வி ஷா. அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி அவுட்டாகி வெளியேறினார். அடுத்ததாக வார்னரும் 61 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற திடீரென தடுமாறத் துவங்கியது டெல்லி அணி. அடுத்து ஜோடி சேர்ந்த அக்சர் படேலும் ஷர்துல் தாக்கூரும் நிதானமாக விளையாடினர்.

ஏதுவான பந்துகளை மட்டுமே சிக்ஸர், பவுண்டரிகளாக இந்த ஜோடி மாற்றியது. இருவரும் கொல்கத்தாவுக்கான இலக்கை 200க்கு மேல் கொண்டு நிறுத்தியிருந்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. தற்போது 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ரஹானேவும் வெங்கடேஷ் அய்யரும் ஓப்பனர்களாக களமிறங்கினர்.

கடின இலக்கை நோக்கி ஆடுவதால் பொறுமையாக விளையாட வேண்டிய துவக்க ஜோடி வழக்கம்போல் சொதப்பியது. கலீல் அகமது பந்துவீச்சில் இருவரும் பவர்பிளே முடிவதற்குள் வெளியேறி இருந்தனர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ரானாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சை நிர்மூலமாக்கினர். துவண்டு கிடந்த ரன்ரேட்டை தூக்கி நிறுத்த இருவரும் முயற்சிக்கும் போது, நிதிஷ் ரானா வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவருக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயரும் 54 ரன் குவித்த நிலையில் அவுட்டாக கொல்கத்தாவின் தோல்வி உறுதியாக துவங்கியது.

அடுத்து வந்தவர்களில் ரஸல் 21 ரன்களும் சாம் பில்லிங்ஸ் 15 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 19.4 ஓவர்களில் 171 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது கொல்கத்தா. டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com